ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

திரங்கானுவில் வெள்ள பாதிப்பு அதிகரிப்பு- பகாங்கில் இரு நிவாரண மையங்கள் திறப்பு

கோலாலம்பூர், ஜன 25- திரங்கானு மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி 468 குடும்பங்களைச் சேர்ந்த 1,541 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 375 குடும்பங்களைச் சேர்ந்த 1,313 பேராக இருந்தது.

பெசுட், டுங்குன், கெமாமான், உலு திரங்கானு மற்றும் செத்தியு ஆகிய மாவட்டங்களில் 31 துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் கூறியது.

பகாங் மாநிலத்தின் குவாந்தானில்  திறக்கப்பட்டுள்ள இரு துயர் துடைப்பு மையங்களில் 72 குடும்பங்களைச் சேர்ந்த 164 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  கிளந்தான் மாநிலத்தின் பாசீர் பூத்தே மாவட்டத்தில் 122 குடும்பங்களைச் சேர்ந்த 354 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

ஆறு மாநிலங்களில் உள்ள  பல ஆறுகளில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தில் உள்ளதை வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையின் டெலிமெட்ரி நிலைய கண்காணிப்பு முறை காட்டுகிறது என்று நட்மா தெரிவித்தது.

இதனிடையே, வெள்ளம், மண் சரிவு மற்றும் பாலம் உடைந்தது உள்ளிட்ட காரணங்களால் ஜோகூர், பகாங், கிளந்தான் ஆகிய மாநிலங்களில் 17 சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.


Pengarang :