ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பிரியாவிடை நிகழ்வில் கண் கலங்கினார் மாமன்னர்- மக்களுக்கு நன்றி கூறினார்

கோலாலம்பூர், ஜன 28- தனது ஐந்தாண்டுகால ஆட்சி முடிவுக்கு வருவதை முன்னிட்டு நேற்றிரவு நடத்தப்பட்ட பிரியாவிடை விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண் கலங்கினார்.

தன்னையும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியாவையும் ஏற்றுக் கொண்டமைக்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அந்நிகழ்வில் ஆற்றிய உரையில் பேரரசர் குறிப்பிட்டார்.

தொடக்கம் காணும் எதுவும் முடிவைக் காணும் என்பதும் இணைப்பு இருந்தால் பிரிவும் இருக்கும் என்பதும் உலக நியதி. ஆகவே, நானும் மாட்சிமை தங்கிய பேரரசியாரும் விடைபெறுவதற்குரிய தருணம் வந்து விட்டது என அவர் கூறினார்.

நான் வருத்தமும் மகிழ்ச்சியும் கலந்த நிலையில் பகாங் மாநிலத்திற்கு புறப்படுகிறேன். எனக்கிடப்பட்ட பணிகளை எனது சக்திக்கேற்ப உளப்பூர்வ மனதுடன் மேற்கொண்டதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன் என்று அவர் மேலும் தனது உரையில் தெரிவித்தார்.

எனது கடமையில் நான் வெற்றி கண்டேனா இல்லையா என்பதை நானே தீர்மானிக்க முடியாது. வரலாறு அதனை நிரூபணம் செய்யட்டும் என்று அவர் சொன்னார்.

நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் ஒருமித்த மனதுடன் ஒன்றுபட்டு வாழ்வதற்குரிய உணர்வைக் கொண்டவர்களாகவும் தொடர்ந்து விளங்க வேண்டும் என்று மாமன்னர் கேட்டுக் கொண்டார்.

நமது பலவீனங்கள் மற்றும் அலட்சியம் காரணமாக நாம் இதுநாள் வரை உருவாக்கி வைத்துள்ள ஒற்றுமை சரியும் நிலை ஏற்பட்டால் அது எனக்கு நிச்சயமாக மிகுந்த வேதனையைத் தரும் எனவும் அவர் சொன்னார்.

புதிதாக நியமனம் செய்யப்படவுள்ள பேரரசர் மற்றும் பேரரசியாருக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்த ஆதரவை வழங்குவார்கள் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :