ECONOMYMEDIA STATEMENTNATIONAL

2024 சுக்மா போட்டியில் முதல் மூன்று இடங்களுக்கு சிலாங்கூர் இலக்கு

ஷா ஆலம், ஜன 28- இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் 17 முதல் 24 வரை சரவா மாநிலத்தில் நடைபெறவிருக்கும் 21வது மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பெற சிலாங்கூர் இலக்கு நிர்ணயித்துள்ளது.

தீவிரப் பயிற்சி, உடல் மற்றும் மனோ ரீதியான கண்காணிப்புக்குப் பிறகு இப்போட்டியில் களம் காண்பதற்கான முழு தயார் நிலையில் மாநில விளையாட்டாளர்கள் உள்ளதாக விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

இறைவன் அருளால 2024ஆம் ஆண்டு சுக்மா போட்டிக்கு நாங்கள் முழு தயார் நிலையில் உள்ளதோடு சிறப்பான ஆட்டத் திறனையும் வெளிப்படுத்துவோம். முந்தைய சுக்மா போட்டிகளை விட இம்முறை சிலாங்கூர்  சிறப்பான முடிவுகளைப் பதிவு செய்யும் என நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பெற நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். முதலாவது இடத்தைப் பிடித்தால் அது போனஸ் வெற்றியாக இருக்கும். அதிகமான தங்கப் பதக்கங்களைப் பெறுவதற்கு நாங்கள் கடுமையாகப் பாடுபடுவோம் என்பது திண்ணம் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள செக்சன் 11இல் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

எத்தனை பதக்கங்களை வெல்ல சிலாங்கூர் இலக்கு நிர்ணயித்துள்ளது என வினவப்பட்ட போது, பதக்க இலக்கை நிர்ணயிப்பதற்கு முன்னர் இந்த சுக்மா போட்டியில் இடம் பெறவுள்ள விளையாட்டுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தாங்கள் காத்திருப்பதாக நஜ்வான் பதிலளித்தார்.

எனினும், தடகளம், நீச்சல், தரை போவ்லிங், குறிசுடுதல், அம்பு எய்தல் உள்ளிட்ட போட்டிகளில் அதிக பதக்கங்களைப் பெற முடியும் என சிலாங்கூர் அணி நம்புகிறது என அவர் சொன்னார்.


Pengarang :