ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஷா ஆலம் பழைய பேங்க் நெகாரா கட்டிடம் கலைக்கூடமாக மாற்றப்படும்- ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் தகவல்

ஷா ஆலம், ஜன 28- இங்குள்ள செக்சன் 14 பகுதியில் அமைந்துள்ள பழைய பேங்க் நெகாரா கட்டிடத்தை மாநில அரசு வாங்கியுள்ளது. அந்த கட்டிடத்தை ஷா ஆலம் கலைக்கூடமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சுமார் மூன்று கோடி வெள்ளியை உட்படுத்திய சீரமைப்பு பணிகள் அக்கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்னும் ஈராண்டுகளில் அங்கு புதிய கலைக்கூடம் செயல்படத் தொடங்கும் என்று வீடமைப்பு மற்றும் கலாச்சாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.

அந்த கட்டிடத்தை மாநில அரசு 3 கோடியே 80 லட்சம் வெள்ளிக்கு கொள்முதல் செய்துள்ளது. அக்கலைக்கூடத்திற்கான வடிவமைப்பு வரைபடங்களை பொதுப்பணி இலாகா தயாரிக்கிறது என்று அவர் சொன்னார்.

நாம் கட்டிடத்தை புனரமைப்பு செய்யவுள்ளோம். இதில் கூடுதல் அனுகூலம் என்னவென்றால் அங்கு ஏற்கனவே பெட்டகம் உள்ளது. உயர் மதிப்பு கொண்ட ஓவியங்களை அங்கு காட்சிக்கு வைப்பதற்கான அனுமதியை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானிடமிருந்து பெறவிருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு 2024ஆம் ஆண்டு ஷா ஆலம் கேலரி பொது கண்காட்சியைத் திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

பழைய ஷா ஆலம் கேலரி இங்குள்ள செக்சன் 14, பெர்சியாரான் தாசேக்கில் கடந்த 33 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே வரும் பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த கண்காட்சியில் 52 கலைப்படைப்புகள் இடம் பெற்றுள்ளதாகவும் சுமார் ஐயாயிரம் வருகையாளர்களை இந்த கண்காட்சி ஈர்க்கும் எனத் தாம் நம்புவதாகவும் பெர்ஹான் சொன்னார்.


Pengarang :