NATIONAL

சீனப் பத்திரிக்கையாளரைக் கடத்திச் சென்று தாக்கியது தொடர்பில் மூவர் கைது

கோலாலம்பூர், பிப் 2 – கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி காஜாங் அருகே சீனாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரை கடத்திச் சென்று கொள்ளையடித்ததாகச் சந்தேகிக்கப்படும்  மூன்று உள்நாட்டினரைப் போலீஸார் நேற்று முன்தினம்  கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட நபர்  விடுமுறையைக் கழிக்க நாட்டிற்கு வந்துள்ளார். அவருக்கு 100,000 வெள்ளி  மதிப்புள்ள ரொக்க சிப் வழங்கப்பட்டு, பகாங்கின்  மாநிலத்தின் கெந்திங்  ஹைலண்ட்ஸில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் விளையாட அழைக்கப்பட்டிருந்தார்.

சம்பந்தப்பட்ட நபர் நஷ்டத்தைச் சந்தித்த நிலையில் 200,000 வெள்ளியை திருப்பித் தருமாறு  வலியுறுத்தப்பட்டதோடு இணைய  வங்கிப் பரிவர்த்தனைகள் மூலம் பணத்தைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார் என காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஜைட் ஹசான் கூறினார்.

அதன் பின்னர் மேலும்  150,000 வெள்ளியைச் செலுத்துமாறு அந்நபர்  கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் தாம் ஏமாற்றப்படுவது உணர்ந்த அவர் அவ்வாறு  செய்ய மறுத்துவிட்டார்.

அன்றிரவு உணவிற்கு அழைக்கப்பட்ட அந்த ஆடவர்  கெந்திங்  ஹைலண்ட்ஸுக்கு அருகிலுள்ள ஒரு டுரியான் பழத்தோட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு  தாக்கப்பட்டு அவரது  உடமைகள் பறிக்கப்பட்டன என்று முகமது ஜைட் சொன்னார்.

அதன் பின்னர் காஜாங்கிலுள்ள  குடியிருப்புப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த நபர் அங்கு அங்கிருந்த  பாதுகாவலர்களால் கட்டப்பட்டு தாக்கப்பட்டார் என்று அவர் கூறினார்.

அக்கும்பலிடமிருந்து தன்னை  விடுவித்துக் கொண்ட அந்நபர்  ஜனவரி 2 ஆம் தேதி காஜாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் பொது மக்களின் உதவியுடன்   புகார் அளித்தார் என்றார் அவர்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 30 முதல் 50 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் இந்த இத்தாக்குதலில்  ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக ஜைட் தெரிவித்தார்.

விசாரணைக்கு உதவுவதற்காகச் சந்தேக நபர்கள் நேற்று முதல் ஐந்து நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :