NATIONAL

போதைப் பொருள் தடுப்புச் சோதனையில் 5,791 பேர் கைது- வெ.15.5 லட்சம் போதைப் பொருள், சொத்துகள் பறிமுதல்

கோலாலம்பூர், 2 பிப் –  கடந்த திங்கள்கிழமை தொடங்கி நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மூன்று  நாள் சிறப்பு சோதனை  நடவடிக்கையில் போதைப்பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக 3 மாணவர்கள் உட்பட மொத்தம் 5,791 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின்  2,200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும்  உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த சோதனை நடவடிக்கையில் 128.3 கிலோகிராம் மற்றும் 16,000 லிட்டருக்கும் அதிகமான பல்வேறு வகையான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அத்துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது கமாருடின் முகமது டின் கூறினார்.

கைது செய்யப்பட்ட அனைவரும்  14 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனக் கூறிய அவர்,  போதைப்பொருள் விநியோகிப்பாளர்ளை சாலைத் தடுப்பு சோதனைகளில்  கண்டறிந்து கைது செய்தல், போதைப்பொருள் புகலிடங்களை  அழித்தல், போதைப்பித்தர்கள்  மீது நடவடிக்கை எடுத்தல், போதைப்பொருள் குற்றங்களுக்காகத் தேடப்படும் நபர்களைக் கண்டறிந்து கைது செய்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றார்.

கைது செய்யப்பட்டவர்களில் போதைப் பொருள் விநியோகிப்பாளர்கள் (ஒரு மாணவர் உட்பட 534 பேர்), போதைப் பித்தர்கள்  (நான்கு அரசு ஊழியர்கள் மற்றும் இரண்டு மாணவர்கள் உட்பட 3,226 பேர்), தேடப்படும் நபர்கள் (247 பேர்), பிற குற்றங்களுக்காகத் தேடப்படுவோர் (1,784 பேர்) ஆகியோரும்  அடங்குவர் என் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்நடவடிக்கையில் 34,872.31 வெள்ளி ரொக்கம், 876,500  வெள்ளி மதிப்புள்ள வாகனங்கள், 18,600 வெள்ளி மதிப்புள்ள நகைகள் மற்றும் 5,000 வெள்ளி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் உட்பட 934,972.31 வெள்ளி  மதிப்புள்ள பல்வேறு சொத்துக்களையும் தமது தரப்பு கைப்பற்றியதாக முகமது கமாருடின் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் சொத்துகள் ஆகியவற்றின்  மொத்த மதிப்பு 15 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி என  மதிப்பிடப்பட்டுள்ளது என்றார் அவர்.


Pengarang :