ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எஸ்.பி.எம் தேர்வு எழுதிய 3,000 மாணவர்களுக்கு திறன் கல்வி & சீருடை இயக்க கண்காட்சி

செய்தி; சு.சுப்பையா

செந்தோசா.பிப்.4-  நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வு மார்ச் மாதத் துவக்கத்தில் எழுதி முடிப்பார்கள். அடுத்த கட்ட திறன் கல்வி மற்றும் அறிவார்ந்த தொழிற்கல்வி தொடர்ந்து மேற் கொள்ள ஏதுவாக அவர்களுக்கு வழிகாட்டி கண்காட்சி எதிர் வரும் 23 மற்றும் 24 ஆம் தேதி மார்ச் மாதம் பெட்டாலிங் ஜெயாவில் நடை பெற விருக்கிறது. இந்நிகழ்ச்சியில் குறைந்தது 3,000 மாணவர்கள் சிலாங்கூர் மாநிலத்தில் இருந்து கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக செந்தோசா சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அளவிலான இந்த திறன் மற்றும் சீருடை இயக்க கண்காட்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜுடன் இணைந்து 7 இந்திய அரசு சாரா இயக்கங்கள் ஏற்பாடு செய்கின்றன.

ஜொகூர் மாநில ஜெயா டிரி இயக்கம், செஜாத்தரா செந்தோசா,சதனா இயக்கம், மலேசிய இந்திய இளைஞர் இயக்கம், கோலக் கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், சமூக நல ஆய்வு அறவாரியம், இந்தியர் முன்னாள் முப்படை வீரர்கள் போன்ற அரசு சாரா அமைப்புகள் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரோடு இணைந்து இந்தக் கண்காட்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சி திட்டமிட்ட இலக்கை அடைய முன் கூட்டியே சிலாங்கூரில் இந்தியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் விளக்க கூட்டங்கள் நடத்தப்படும். செந்தோசா, பந்திங், சா ஆலம், பெட்டாலிங் ஜெயா, கிள்ளான், காப்பார், கோல சிலாங்கூர் போன்ற பகுதிகளில் முன்கூட்டியே விளக்க கூட்டங்கள் நடத்தப்படும். அவ்வட்டாரத்தில் உள்ள கோவில், பெற்றோர் ஆசிரியர் சங்கம், குடியிருப்போர் சங்கம் போன்ற வட்டார அமைப்புகளுடன் இணைந்து இந்த விளக்க கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் அவர்களின் சிறப்பு அதிகாரி டாக்டர் உமாதேவி தெரிவித்தார்.

திறன் கல்வி மேம்பாட்டிற்கு மத்திய அரசு 680 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை நாட்டின் நிதி அமைச்சரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை அறிவித்த போது தெரிவித்தார். இதே போல் ஆற்றல் படைத்த தொழிலாளர்களை உருவாக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரியும் கேட்டுக் கொண்டார் என்று குணராஜ் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க திறன் கல்வி பயின்று வெற்றி நடைப் போடும் வெற்றியாளர்களை அழைத்து சொற்பொழிவு மற்றும் விளக்கம் கொடுக்கப்படும். இதே போல் சீருடை படையை சேர்ந்த, குறிப்பாக உயர் போலீஸ் அதிகாரி, ராணுவ அதிகாரி, சிறைச்சாலை அதிகாரி போன்றவர்களும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய சமுதாய மாணவர்கள் எதிர்கால மனித வளச் சந்தைக்கு தேவையான மனித வளத்தை தயார் படுத்துவதும் இந்த கண்காட்சியின் நோக்கம் என்று குணராஜ் தெரிவித்தார்.

இந்த விளக்க கூட்டத்தில் அனைத்து அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டு திறன் கல்வி குறித்து விளக்கமளித்தனர்.


Pengarang :