NATIONAL

நேற்று வரை ‘பாடு‘ தரவுத் தளத்தில் 26.9 லட்சம் பேர் பதிவு

பாச்சோக், பிப் 7- ‘பாடு‘ எனப்படும் முதன்மை தரவுத் தளத்தில் நேற்று
வரை நாடு முழுவதும் 26 லட்சத்து 90 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாகப்
புள்ளி விபரத்துறையின் தலைவர் டத்தோஸ்ரீ முகமது ஊஸீர் மாஹிடின்
கூறினார்.

கடந்த மாதம் 2ஆம் தேதி இந்த ‘பாடு‘ தரவுத் தளம் தொடங்கப்பட்டது
முதல் சரவா, சிலாங்கூர், ஜோகூர், பெர்லிஸ், கிளந்தான் ஆகிய
மாநிலங்களில் அதிகமானோர் இதில் பதிவு செய்துள்ளதாக அவர்
சொன்னார்.

நேற்று வரையில் கிளந்தான் மாநிலத்தில் 191,078 பேர் அல்லது 15
விழுக்காட்டினர் இந்த தளத்தில் தங்களைப் பதிந்து கொண்டுள்ளனர் என்று
அவர் குறிப்பிட்டார்.

ஜோகூர் மாநிலத்தில் 270,000 பேர் பதிவு செய்துள்ள நிலையில் பெர்லிஸ்,
மற்றும் சரவாவில் இந்த எண்ணிக்கை 100,000த்தை தாண்டியுள்ளதோடு
சிலாங்கூரிலும் அதிகமான பதிவுகள் பெறப்பட்டுள்ளன என்று அவர்
குறிப்பிட்டார்.

இன்று இங்குள்ள டிஜிட்டல் பொருளாதார மையத்தில் (பெடி) ‘பாடு‘ பதிவு
நடவடிக்கைகளைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார். கிளந்தான் மாநில புள்ளிவிபரத் துறையின்
இயக்குநர் ஃபரேஸா முகமது சானியும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

தற்போதைய நிலவரங்களைக் கருத்தில் கொள்கையில் கூடிய விரைவில்
30 லட்சம் பேரை ‘பாடு‘ தரவுத் தளத்தில் பதிவு செய்யும் இலக்கை
அடைய முடியும் எனத் தாங்கள் நம்புவதாக முகமது உஸீர் கூறினார்.

‘பாடு‘ முறையை புதுப்பிப்பதில் பொது மக்களுக்கு உதவும் பணியை நாடு
முழுவதும் உள்ள 911 பெடி மையங்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர்
சொன்னார்.

இந்த ‘பாடு‘ திட்டத்தில் பதிவு செய்வதற்கு எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம்
தேதி வரை கால அவகாசம் உள்ளது. தற்போது நாங்கள் மேற்கொண்டு
வரும் செயல்திட்டங்களின் வாயிலாக அடுத்த ஒரு மாதக் காலத்தில் ‘பாடு‘
பதிவுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பொது மக்கள் மத்தியில்
அதிகரித்து பதிவு நடவடிக்கையும் ஏற்றம் காணும் என நம்புகிறோம் என
அவர் குறிப்பிட்டார்.


Pengarang :