ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டின் எல்லைகளில் உயர்ந்த பட்ச பாதுகாப்பை ஆயுதப்படை உறுதி செய்து வருகிறது

கோத்தா திங்கி, பிப் 11- நாட்டின் இறையாண்மையை தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கும் அத்துமீறல்களைத் தடுப்பதற்கும் ஏதுவாக நாட்டின் எல்லைகளில் எப்போதும் உயர்ந்த பட்ச பாதுகாப்பு அமல்படுத்தப்படுவதை மலேசிய ஆயுதப்படை (ஏ.டி.எம்.) தொடர்ச்சியாக உறுதி செய்து வருகிறது.

நாடு முழுவதும் உள்ள கட்டுப்பாட்டுச் சாவடிகளின் வாயிலாக இரட்டைக் கோரிக்கைகள் உள்ள இடங்கள், கண்காணிப்பு அதிகம் தேவைப்படும் இடங்களில் தரை வான் மற்றும் கடல் மார்க்கச் சோதனைள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் கூறினார்.

அந்நிய நாட்டுப் போர்க் கப்பல்கள் மற்றும் அந்நிய மீன்பிடி படகுகள் நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்கவும் நாட்டின் இறையாண்மையைக் காக்கவும் ஆயுதப்படைகள் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன என்றார் அவர்.

இதுவரை ரோஹிங்கியாக்கள் அதிக அளவில் நாட்டிற்குள்ள நுழைகின்றனர். இவர்களைத் தடுப்பது தவிர்த்து கடத்தல் மற்றும் கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகளையும் முறியடித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள பொன்விழா மண்டபத்தில் கோத்தா திங்கி-பீனா புரி முவாய் தாய் குத்துச் சண்டைப் போட்டியை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

தனியாகவும் இதர அமலாக்க நிறுவனங்களுடன் கூட்டாகவும் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஆயுதப்படை பெற்ற வெற்றிகள் குறித்து கருத்துரைத்த போது அமைச்சர் இவ்வாறு சொன்னார்.

ஆயுதப்படை எப்போதும் தயார் நிலையில் இருப்பதற்கு ஏதுவாக புதிய தளவாடங்களை கொள்முதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

 

 


Pengarang :