ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நெடுஞ்சாலையில் காரின் கண்ணாடியை உடைத்த வாகனமோட்டிக்கு போலீஸ் வலைவீச்சு

ஜோகூர்பாரு, பிப் 11- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 139.6வது கிலோ மீட்டரில் நேற்று கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்ததாக சந்தேகிக்கப்படும் மிட்சுபிஷி லான்சர் காரின் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை சித்தரிக்கும் 54 வினாடி காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் இதன் தொடர்பில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் புகார் ஒன்றைத் தாங்கள் பெற்றதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் ஆணையர் எம். குமார் கூறினார்.

அவசரத் தடத்தில் பயணித்த சந்தேகப் பேர்வழியின் காரை பாதிக்கப்பட்ட நபர் தடுக்க முயன்றதால் கோபமடைந்த அந்நிய நாட்டவர் என சந்தேகிக்கப்படும் அவ்வாடவர் இந்த அடாதச் செயலைப் புரிந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தைச் சித்தரிக்கும் காணொளியை 26,000 இணையவாசிகள் பார்த்துள்ளதோடு 2,300 எதிர்வினைகளும், 694 கருத்துகளும் 3,000 பகிர்வுகளும் பதிவாகியுள்ளன. 

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு முதல் ஐந்தாண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 427வது பிரிவின் கீழ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தவிர 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லுடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது குமார் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

இதனிடையே. இம்மாவட்டத்தில் உள்ள பொழுபோக்கு மையங்களில் நேற்று பின்னிரவு 2.00 மணி முதல் காலை 8.00 மணி வரை மேற்கொள்ளப் பட்ட சோதனை நடவடிக்கையில் 48 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் உள்பட 79 பேர் கைது செய்யப்பட்டதாக இன்று இங்கு வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் அவர் சொன்னார்.

கைது செய்யப்பட்டவர்களில் 16 முதல் 50 வயது வரையிலான அந்நிய நாட்டினரும் அடங்குவர்.  36 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் அடங்கிய அவர்கள் பல்வேறு குடிநுழைவுக் குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டனர் என்றார் அவர்.


Pengarang :