ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மருத்துவமனை வளாகத்தில் மாடுகளைத்  மேயவிட்டால் கடும் நடவடிக்கை- டத்தோ ரிஸாம் எச்சரிக்கை

ஷா ஆலம், பிப் 12- தாங்கள் வளர்க்கும் மாடுகளை பொது இடங்களில் குறிப்பாக மருத்துவமனை வளாகங்களில் மேயவிடும் கால்நடை வளர்ப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் எச்சரித்துள்ளார்.

அண்மையில் சபாக் பெர்ணம், தெங்கு அம்புவான் ஜமஹா மருத்துவமனை வளாகத்தில்  நூற்றுக்கணக்கான மாடுகள் அத்துமீறி நுழைந்தது தொடர்பில்  டத்தோ ரிஸாம் இஸ்மாயில் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

 இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளை கருத்தில் கொண்டு இவ்விவகாரத்தை நான் மிகவும் கடுமையாகக் கருதுகிறேன். காரணம், உயிரைப் பலிகொள்ளும் சம்பவங்கள் கூட நிகழக்கூடும் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் மற்றும் மாநில கால்நடைச் சேவைத் துறையிடன் இணைந்து கடந்த 8 ஆம் தேதி டத்தோ ரிஸாம் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இத்தகைய சோதனைகள் மருத்துவமனை வளாகம், ஜாலான் செபிந்தாஸ்-பாகான் தெராப், பாகான் தஞ்சோங் மற்றும் சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் அடையாளம் கண்டுள்ள இடங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்றும் ரிஸாம் தெரிவித்தார்.

மருத்துவமனை வளாகத்திலுள்ள புற்களை மேய்வதற்காக பொறுப்பற்ற கால்நடை வளர்ப்போர் சிலர் தங்கள் மாடுகளை இரவு வேளைகளில் அவிழ்த்து விடுவதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.

கடந்த ஒரு மாத காலமாக நிகழ்ந்து வரும் இச்சம்பவங்கள் மருத்துவமனைக்கு ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் வருகையாளர்களுக்கு பெரும் அசௌகர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


Pengarang :