ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் வெப்ப நிலை கட்டுப்பாட்டில் உள்ளது- ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா தகவல்

ஷா ஆலம், பிப் 14- மாநிலத்தின் சில பகுதிகளில் காணப்படும் வெப்ப வானிலை கட்டுப்பாட்டில் உள்ளதோடு அச்சமூட்டும் அளவை அது எட்டவில்லை என்று சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

சுற்றுச்சூழல் துறையிடமிருந்து வெப்ப வானிலை தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் இதுவரை தங்கள் தரப்புக்கு கிடைக்கவில்லை என்று அவர் சொன்னார்.

சிலாங்கூரில் வெப்ப வானிலை அபாயம் தொடர்பான எந்த எச்சரிக்கையையும் சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறை வெளியிடவில்லை. இத்தகைய எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வுத்துறையிடமிருந்து சுற்றுச்சூழல் துறை பெறும் பட்சத்தில் இவ்விவகாரம் மீது கவனம் செலுத்துவோம் என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளன. வெப்ப வானிலை தொடர்பான அச்சுறுத்தல் இருக்கும் பட்சத்தில் அது குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

தீபகற்ப மலேசியாவில் உள்ள நான்கு மாவட்டங்கள் மூன்று தினங்களுக்கு தொடர்ச்சியாக வெப்ப நிலையைப் பதிவு செய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை அறிக்கை ஒன்றில் நேற்று கூறியிருந்தது.

கெடா மாநிலத்தின் லங்காவி மற்றும் பொக்கோ செனா, பினாங்கு மாநிலத்தின் செபராங பிறை உத்தாரா மற்றும் செபராங் பிறை தெங்கா ஆகிய அந்த நான்கு மாவட்டங்களிலும் வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ் வரை உயரும் எனஅது தெரிவித்திருந்தது.

வெப்ப வானிலை அல்லது எல்-நினோ பருவநிலையை மாநிலம் எதிர்கொள்ளும் பட்சத்தில் ஒன்பது மாதங்களுக்கு தாக்குப் பிடிக்கும் அளவுக்கு நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் சேகரிப்பு மையங்களில்  போதுமான நீர் கையிருப்பு உள்ளது என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் முன்னதாக கூறியிருந்தார்.


Pengarang :