ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இவ்வாண்டில் சுமார் 6,000 சிலாங்கூர் கூ வீடுகள் நிர்மாணிக்கப்படும்

ஷா ஆலம், பிப் 14- இவ்வாண்டில் மாநிலம் முழுவதும் 21 வீடமைப்புத் திட்டங்கள் வாயிலாக சுமார் 6,000 சிலாங்கூர் கூ வீடுகள் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செரிபு பைடுரி சென். பெர்ஹாட் நிறுவனத்தால் கோல லங்காட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 1,312 வீடுகளை உள்ளடக்கிய ரூமா இடாமான் பண்டார் சவுஜானா திட்டமும் அதில் அடங்கும் என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.

இந்த திட்டங்கள் யாவும் பல ஆண்டுகளாக நிர்மாணிப்பில் உள்ள நிலையில் அவற்றில் பாதித் திட்டங்கள் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் முற்றுப் பெறும். வீடுகளை வாங்கியவர்கள் விரைந்து குடியேறுவதற்கு ஏதுவாக அவ்வீடுகளுக்கான சாவியை விரைந்து ஒப்படைப்போம் என்று அவர் சொன்னார்.

கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு புத்துயிரளிப்பதிலும் மக்கள் வீடமைப்புத் திட்ட வீடுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் மாநில அரசு தற்போது கவனம் செலுத்தி வருகிறது என்று அவர் சொன்னார்.

கடந்த 2014 முதல் கடந்தாண்டு இறுதி வரை மொத்தம் 245,371 சிலாங்கூர் கூ வீடுகளுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அவற்றில் 57,185 வீடுகளை சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம், தனியார் மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் மாநில அரசின் துணை நிறுவனங்கள் நிர்மாணித்து வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.

எஞ்சிய 188,186 வீடுகளுக்கு மாநில அரசுத் துறைகள் மற்றும் ஊராட்சி மன்றங்களிடமிருந்து கட்டுமானத் திட்டமிடல் அனுமதி பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார். 


Pengarang :