ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஓப் செலாமாட் 21- கோலாலம்பூர், புத்ரா ஜெயாவில் 821 விபத்து பதிவு-  மூவர் மரணம்

கோலாலம்பூர், பிப் 15- நேற்றுடன் முடிவுக்கு வந்த 21வது ஓப் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் 821 விபத்துகள் பதிவான வேளையில் மூவர் மரணமடைந்தனர். 

சீனப்புத்தாண்டை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட 19 சாலைத் தடுப்புச் சோதனைகளின்  போது பல்வேறு குற்றங்களுக்காக  26,714 குற்றப்பதிவுகள் வெளியிட்டப்பட்டதோடு 36 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுடின் அப்துல் மஜிட் கூறினார்.

இந்த காலக்கட்டத்தில் பல்வேறு குற்றங்களுக்காக இருபது பேர் கைது செய்யப்பட்டனர். சாலை ரவுடித்தனம் தொடர்பில் 11 பேரும் கார் நிறுத்துமிடங்களில் சட்டவிரோதமாக கட்டணம் வசூலித்த குற்றத்திற்காக ஐவரும் போலி ஆவணங்கள் தொடர்பில் ஒருவரும் போதைப் பொருள் மற்றும் கெத்தும் நீர் குற்றங்கள் தொடர்பில் தலா ஒருவரும் கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்.

பெருநாள் காலத்தின் போது சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக கோலாலம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மீது கோலாலம்பூர் போலீசார் கவனம் செலுத்தியதாக அவர் சொன்னார்.

இந்த 21வது ஓப் செலாமாட் நடவடிக்கையின் போது 50 ஹாட்ஸ்பாட் பகுதிகள் மற்றும் கருப்பு பட்டியலிடப்பட்ட 11 பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளும் பணியில் எட்டு உயர் அதிகாரிகள் உள்பட 140 காவல் துறையினர் ஈடுபட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :