ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாநிலத்தின் 56 தொகுதிகளிலும் சிலாங்கூர் சாரிங்  இயக்கம்- 20,000 பேர் பயன்பெறுவர்

கோல லங்காட், பிப் 17- மாநில அரசின் ஏற்பாட்டில்  அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெறவிருக்கும் இலவச சுகாதார பரிசோதனை நிகழ்வு இன்று சிஜாங்காங் சட்டமன்றத் தொகுதியில் தொடங்கியது

வழக்கமான மருத்துவ  பரிசோதனை, இரத்தம் மற்றும் சிறுநீர் சோதனை உள்ளிட்ட அடிப்படை மருத்துவச் சோதனைகளை  உள்ளடக்கிய இந்த  சிலாங்கூர் சாரிங் திட்ட அமலாக்கத்திற்காக   மாநில அரசு 32 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்  தெரிவித்தார்.

சுமார் 20,000 பேர் பயன்பெறும் இந்த  திட்டத்தில் பெருங்குடல், புரோஸ்டேட், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோயைக் கண்டறிய தொடக்கக்கட்ட பரிசோதனைகளும் நடத்தப்படுகிறது என்று ஜமாலியா ஜமாலுடின் விளக்கினார்.

இது தவிர, பல், கண், காது மற்றும் பிசியோதெரபி ஆகிய சோதனைகளும் கூடுதலாக  நடத்தப்படும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 300 முதல் 500 பேரை இலக்காகக் கொண்டு இச்சோதனை நடத்தப்படுகிறது என அவர் சொன்னார்.

இச்சோதனையில் பங்கு கொள்ள விரும்பும்  பொது மக்கள் செலங்கா  செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும் விண்ணப்பத்தில் பெறப்பட்ட சோதனையின் முடிவுகளின் அடிப்படையில் செயலி வழி கூப்பன் வழங்கப்படும் என்று அவர்  குறிப்பிட்டார்.

இன்று இங்குள்ள தி ஆர்ச் @ ரிம்பாயுவில் நடைபெற்ற சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனை நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக்    கூறினார்.

மேலும் அதிகமான மக்கள் பயனடைவதை உறுதி செய்ய இவ்வாண்டு சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை மற்றும் தேசிய மக்கள்தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றுடனான ஒத்துழைப்பை தமது துறை  தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

ஏதேனும் நோய் இருந்தால் அதனை முன்கூட்டியே கண்டறிந்து   தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இதுபோன்ற பரிசோதனைகள் அவசியம்  என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் ஜமாலியா தெரிவித்தார்.

சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனைக் திட்டத்தை தொடர 32  லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோ அமிருடின் ஷாரி 2024 வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அறிவித்திருந்தார்.


Pengarang :