NATIONAL

மலேசிய மடாணி பச்சரிசி பரிந்துரை முறையற்ற வணிகக் கும்பல் நடவடிக்கைக்குத் துணை போகுமா? அன்வார் மறுப்பு

கோலாலம்பூர், பிப் 20 – மலேசியா மடாணி பச்சரிசை பரிந்துரை உள்நாட்டு
பச்சரிசி (எஸ்.எஸ்.டி) மற்றும் இறக்குமதி செய்யப்படும் பச்சரிசியை
(எஸ்.எஸ்.ஐ.) கலக்கும் கார்ட்டெல் எனப்படும் முறையற்ற வணிகக்
கும்பலின் நடவடிக்கைக்கு உதவும் என்ற குற்றச்சாட்டை பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.

மாறாக, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை கார்ட்டெல் நடவடிக்கைகளை
முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், இவ்விவகாரம்
தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதன்
தொடர்பில் விரைவில் நடைபெறவிருக்கும் வாழ்க்கைச் செலவினம்
மீதான தேசிய நடவடிக்கை மன்றக் கூட்டத்தில் (நாக்கோல்) விரிவாக
விவாதிப்போம் என்று அவர் சொன்னார்.

நாங்கள் கார்ட்டெல் தலையீட்டைத் துண்டிக்க விரும்புகிறோம். இது
குறித்து நாக்கோல் கூட்டத்தில் விவாதிப்போம். இப்போதைக்கு எந்த
முடிவும் எடுக்கப்படவில்லை என்று நேற்று இங்கு நடைபெற்ற மேபேங்க்
ஊழியர்களுடான கலந்துரையாடல் மற்றும் மதிய உணவு விருந்து
நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் இரண்டாம் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமிர் ஹம்சா
அஜிசான், பிரதமர் துறை அமைச்சர் டத்தோ முகமது நாய்ம் மொக்தார்,
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை
துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன், மேபேங்க் குழுமத்தின் தலைவர்
டான்ஸ்ரீ ஸாம்ஸாம்ஜைரானி முகமது ஈசா ஆகியோர் கலந்து
கொண்டனர்.

புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் அபு ஹூசேன் ஹாபிஷ்
சைட் அப்துல் ஃபாசால் முன்வைத்த மலேசிய மடாணி பச்சரிசி பரிந்துரை
முறையற்ற வணிகக் கும்பலுக்கு சாதகமாக அமையும் என்பதால் இந்த
திட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என பிரதமரை அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் வலியுறுத்தியிருந்து தொடர்பில் அன்வார் இவ்வாறு கருத்துரைத்தார்.

பத்து கிலோ 30 வெள்ளி என்ற விலையில் விற்கக்கூடிய மலேசியா
மடாணி அரிசியை அரசாங்கம் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி
அறிமுகப்படுத்தும் என்று நாக்கோல் உணவுப் பிரிவு பணிக்குழுவின்
தலைவருமான அபு ஹூசேன் கடந்த 14ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :