NATIONAL

தற்காப்புத் துறையில் ஆசியானின் பங்கேற்பை வலுப்படுத்த மலேசியா விருப்பம்

கோலாலம்பூர், பிப் 20 – மலேசிய ஆயுதப்படை வீரர்களுக்குக் கூட்டுப்
பயிற்சி, திறன் வெளிக்கொணர் பயிற்சி மற்றும் உள்நாட்டுத் தற்காப்புத்
துறை மேம்பாடு உள்பட தற்காப்பு உறவு, ஒத்துழைப்பு மற்றும் அரசந்திர
உறவுகளை வலுப்படுத்த மலேசியாவும் ஜெர்மனியும் கடப்பாடு
கொண்டுள்ளன.

இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை ஜெர்மனிக்கு
அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்ட தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ
முகமது காலிட் நோர்டின், ஜெர்மனி தற்காப்பு அமைச்சர் போரிஸ்
பிஸ்தோரிசுடன் நடத்திய சந்திப்பின் போது இந்த உடன்பாடு
எட்டப்பட்டதாக தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

மலேசியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பை
மேலும் வலுப்படுத்துவதில் மலேசிய தற்காப்பு அமைச்சரின் இந்த
அதிகாரப்பூர்வப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது
என்று அது தெரிவித்தது.

தற்காப்பு வெள்ளை அறிக்கையில் இடம் பெற்றுள்ள தேசிய தற்காப்பு
வியூகத்தின் மூன்றாவது தூணாக விளங்கும் நம்பிக்கைகுரிய நட்புறவுக்கு
ஏற்ப இது அமைந்துள்ளது என அவ்வறிக்கை குறிப்பிட்டது.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இம்மாதம் 16 முதல் 18 வரை
நடைபெற்ற மூனிக் பாதுகாப்பு மாநாட்டிலும் (எம்.எஸ்.சி.) அமைச்சர்
காலிட்டும் அவரின் பேராளர் குழுவினரும் கலந்து கொண்டனர்.

ஜெர்மனி அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் மிகவும் உயரிய
பாதுகாப்பு மாநாடாக விளங்கும் இந்த எம்.எஸ்.சி. கடந்த 1963ஆம் ஆண்டு
முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டில் ஐரோப்பா மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த தற்காப்பு
அமைச்சர்கள், ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அரசாங்கத்
தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த வருகையின் ஒரு பகுதியாகச் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங்
எங் ஹென்னை அமைச்சர் காலிட் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து
பேச்சு நடத்தினார்.


Pengarang :