ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போலீஸ்காரர்கள் போல் நடித்து அந்நியப் பிரஜைகளிடம் கொள்ளை- நால்வர் கைது

கோலாலம்பூர் , பிப் 25-  தலைநகர்,  ஜாலான் பாண்டன் இண்டாவில் உள்ள ஒரு வீட்டில் மூன்று தினங்களுக்கு போலீஸ்காரர்கள் போல் நடித்து ஆயுதமேந்தி கொள்ளையடித்தாக சந்தேகிக்கப்படும்  கும்பலைச்  சேர்ந்த  நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

முப்பது முதல் 44 வயதுடைய அனைத்து சந்தேக நபர்களும் தலைநகர் வட்டாரத்தில்  நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

தாமும் மேலும் ஏழு பேரும் வீட்டில் இருந்தபோது ‘மேலங்கி’ அணிந்து பெரிய கத்தரிக்கோல் மற்றும் சுத்தியல் ஏந்திய கும்பல் ஒன்று வீட்டிற்குள் நுழைந்து தங்களை  ஒரே அறையில் அடைந்து வைத்ததாக வங்காளதேச நபர் ஒருவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாக அவர் சொன்னார்.

பின்னர், சந்தேக நபர்கள்  வீட்டின் ஒவ்வொரு அறையையும் சோதனையிட்டு  புகார்தாரர் மற்றும் அவரது நண்பர்களுக்குச் சொந்தமான ரொக்கம், நகைகள், கைப்பேசிகள்  ஆவணங்களைச் சூறையாடிச் சென்றனர் என்று நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேகப்பேர்வழிகள்  கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து  31 கைப்பேசிகள், “போலீஸ்” என்ற எழுத்து பொறிக்கப்பட்ட  மேலங்கி, ஆடைகள், இரும்புச் சுத்தியல்கள், நெம்புகோல், ஸ்பானர்கள்,  ரொக்கப் பணம் மற்றும் மூன்று கார்களை போலீஸார் பறிமுதல் செய்ததாக முகமது ஆசாம் கூறினார்.

சந்தேகநபர்களில் மூவர் 23 முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளதோடு இரு போதைப் பொருள்  வழக்குகள் தொடர்பில் தேடப்படுவோர் பட்டியலிலும் உள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில்  சந்தேக நபர்கள்  அனைவரும் போதைப் பொருளைப் பயன்படுத்தியது  கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் வரும் மார்ச் 1ஆம் தேதி வரை விசாரணைக்காக தடுத்து வைக்கப் பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்டது, மரணம் அல்லது பலத்த காயத்தை ஏற்படுத்த முயற்சித்தது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின்  395/397வது பிரிவின் கீழும் பொது சேவை  ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் 170வது பிரிவின் கீழும் அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது என அவர் கூறினார்.


Pengarang :