ECONOMYMEDIA STATEMENTNATIONAL

செயற்கை நுண்ணறிவு பயிற்சிகளை மாநில அரசு அதிக அளவில் நடத்த வேண்டும்- சட்டமன்றத்தில் வலியுறுத்து

ஷா ஆலம், மார்ச் 2- இளம் தலைமுறையினருக்கு சந்தை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்கு ஏதுவாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) பயிற்சிகளை மாநில அரசு அதிகளவில் நடத்த வேண்டும் என்று புக்கிட்  லஞ்சான் தொகுதி உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த செயற்கை நுண்ணறிவு படைப்பாற்றல் துறை ஆய்வக ஆராய்ச்சி, படைப்பாற்றல் முன்முயற்சி மற்றும் புத்தாக்க உந்து சக்தி திட்டம் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் திறனைக் கொண்டுள்ளதாக புவா பெய் லிங் கூறினார்.

உலகம் தற்போது இலக்கவியலை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. ஆகவே, நமது பிள்ளைகளும் இலக்கவியல் துறையிலும் தொழில் திறன் மற்றும் தொழில்நுட்ப கல்வியிலும் (திவேட்) ஆற்றலை வளர்த்துக் கொள்வதிலிருந்து பின்தங்கி விடாமலிருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இளம் தலைமுறையினருக்கு தொழில் கல்வி வழங்குவதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநிலமும் சொந்த திவேட் திட்டத்தை அதாவது சிலாங்கூர் தொழில்திறன் மேம்பாட்டு மையத்தை (எஸ்.டி.டி.சி.) கொண்டிருப்பது குறித்து மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் பாராட்டு தெரிவித்ததையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் நேற்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது புவா இவ்வாறு தெரிவித்தார்.

மாநில மக்கள் அரசாங்கச் சேவைகளைப் பெறுவதற்கு ஏதுவாக வார இறுதி நாட்களில்  நடமாடும் முகப்பிடச் சேவைகளை மாநில அரசு  ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பொது மக்களின் தேவையை ஈடு செய்வதற்கு ஏதுவாக மக்கள் அதிகம் ஒன்று கூடும் பகுதிகளில் இத்தகைய நடமாடும் முகப்பிடச் சேவை மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :