ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்தச் சட்டமா? உள்துறை அமைச்சர் மறுப்பு

புத்ராஜெயா, மார்ச் 2- நாட்டிலுள்ள இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்காக 1984ஆம் ஆண்டு அச்சு இயந்திர மற்றும் பிரசுரச் சட்டத்தில் திருத்தம் செய்யப் படவுள்ளதாக கூறப்படுவதை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மறுத்துள்ளார்.

அந்த சட்டம் தொடர்பில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருவதை ஒப்புக் கொண்ட அவர், எனினும் விதிமீறல் மற்றும் தவறான நடத்தைக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதை மட்டுமே அவ்விவாதம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

இணைய ஊடகங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான திருத்தங்கள் எங்கள் ராடாரில் அறவே கிடையாது என்பதோடு இதன் தொடர்பில் எந்த தரப்பிடமிருந்தும் எங்களுக்கு எவ்விதமான பரிந்துரையும் வரவில்லை என்று அவர் இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஊடக மன்றத்தை அமைப்பதற்கு உள்துறை அமைச்சு எதிர்ப்பு தெரிவிப்பதாக வெளி வந்த செய்திகளையும் சைபுடின் மறுத்தார்.

இந்த செய்தியைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நானும் அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ருஜி உபியும் அதிலுள்ள ஆட்சேபத்திற்குரிய பகுதி எது என்பதை  ஆராய்ந்தோம். அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற நிலைப்பாட்டை நாங்கள் ஒருபோதும் எடுக்கவில்லை. அவ்வாறு கூறப்படுவதில் உண்மையும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

வரும் ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மலேசியா ஊடக மன்ற உருவாக்கம் தொடர்பான மசோதா மீது எங்களுக்கு எந்த ஆட்பேமும் இல்லை என்றும் அவர் சொன்னார்.

ஊடக மன்றத்தை உருவாக்குவது தொடர்பான சட்டங்களை சட்டத் துறை அலுவலகம் தற்போது தயாரித்து வருவதாகவும் பின்னர் அது அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு அடுத்தக் கட்டமாக நாடாளுன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.


Pengarang :