healthMEDIA STATEMENTNATIONAL

பெடுலி சிஹாட் கிளினிக்குகளுக்கு மருந்துகள் வாங்க அனுமதி- மாநில அரசுக்கு பரிந்துரை

ஷா ஆலம், மார்ச் 2- பெடுலி சிஹாட் குழுவில் இடம் பெற்றுள்ள கிளினிக்குகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கான அனுமதியை மாநில அரசு வழங்க வேண்டும் என்று பண்டார் பாரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரைத்துள்ளார்.

தற்போது மருந்துகளின் விலை 25 விழுக்காடு வரை உயர்வு கண்டுள்ள நிலையில் ஓரிட மைய அடிப்படையில் இந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என்று டாக்டர் குவா பெங் ஃபெய் கூறினார்.

அதிக எண்ணிக்கையில் மருந்துகள் வாங்கும் பட்சத்தில் மருத்துவச் செலவினத்தை குறைக்க முடியும். பெடுலி சிஹாட் குழுவில் இடம் பெற்றுள்ள கிளினிக்குகள் மருந்துகளைப் பெறுவதற்குரிய வாயப்பும் இதன் மூலம் கிட்டும் என்று அவர் சொன்னார்.

மாநில சட்டமன்றத்தில்  நேற்று மேன்மை  தங்கிய சிலாங்கூர் சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட 6 கோடியே 70 லட்சம் வெள்ளி நிதியின் வாயிலாக ஒரு லட்சம் பேர் வரை பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளதாக இல்திஸாம் சிஹாட் சிலாங்கூர் (ஐ.எஸ்.எஸ்.) கடந்த ஜூலை மாதம் 2ஆம் தேதி கூறியிருந்தது.

பாலிசிதாரர்கள் தனியார் கிளினிக்குகளில் விரைந்து சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக ஐ.எஸ்.எஸ். திட்டத்திற்கு இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் 3 கோடியே 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டது.


Pengarang :