ECONOMYMEDIA STATEMENT

கம்போங் பூங்கா ராயா குடியிருப்பின் அனைத்து 118 குடும்பங்களுக்கும் மாற்று வீடுகள்- பாப்பாராய்டு அறிவிப்பு

ஷா ஆலம், மார்ச் 11- சுங்கை பூலோ, கம்போங் பூங்கா ராயா ரூமா பாஞ்சாங் குடியிருப்பைச் சேர்ந்த அனைத்து 118 குடும்பங்களுக்கும் மாற்று வீடுகளை வழங்க மாநில அரசு முன்வந்துள்ளது. இதன் வழி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த கிராம மக்கள் எதிர்நோக்கியிருந்த குடியிருப்பு பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

ஈஜோக், புஞ்சா ஆலமிலுள்ள ஆலம் பெர்டானா வீடமைப்பு பகுதியில் சம்நதப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு சிலாங்கூர் கூ வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வறுமை ஒழிப்பு மற்றும் சமூக நலத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.

ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வெள்ளி மதிப்புள்ள இந்த வீடுகள் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு வெறும் 42,000 வெள்ளி விலையில் விற்கப்படுவதாக கூறிய அவர், இதற்கான விண்ணப்பங்களை சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்திடம் விரைந்து சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இந்த வீடுகளை கொள்முதல் செய்வதற்கு இதுவரை 36 பேரிடமிருந்து எங்களுக்கு விண்ணப்பங்கள் கிடைத்து ஒப்புதல் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 2 விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே சிலாங்கூர் கூ வீடுகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளது விண்ணப்பங்களை பரிசீலனை செய்து போது தெரிய வந்தது.

எஞ்சிய குடியிருப்பாளர்கள் விண்ணப்பங்களை விரைவாக சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.  அவர்களின் விண்ணப்பங்கள் கட்டங் கட்டமாக பரிசீலிக்கப்பட்டு வீடுகள் வழங்கப்படும் என இன்று தமது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர்  சொன்னார்.

விண்ணப்பதாரர்கள் இறந்திருந்தால் அல்லது திவால் உள்ளிட்ட சிக்கல்களை எதிர்நோக்கியிருந்தால்  அவர்களுக்கு உதவி புரியவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். முறையான ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களின் வாரிசுகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரில்  வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.

 இந்த தாமான் பெர்டானா குடியிருப்பு கம்போங் பூங்கா ராயாவிலிருந்து 7.8 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது. இந்த வாய்ப்பினை சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பாரங்களை ஒரு வார காலத்தில் எனது அலுவலகத்தில் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் முகமது இஸூவான் காசிம், சுங்கை பூலோ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா மற்றும் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை மேம்பாட்டு வாரியம், வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அலுவலகம், மற்றும் குடியிருப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 


Pengarang :