ECONOMYMEDIA STATEMENTNATIONAL

புற்று நோய் காரணமாக கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

ஷா ஆலம், மார்ச் 21- கோல குபு பாரு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜசெகவை சேர்ந்த லீ கீ ஹியோங் புற்றுநோய் காரணமாக இன்று காலை காலமானார். அன்னாருக்கு வயது 58.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிக்கை ஒன்றின் வாயிலாக இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

கடந்த 2013ஆம் ஆண்டு கோல குபு பாரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லீ, கடந்த மூன்று தவணைகளாக இந்த தொகுதியை தன் வசம் வைத்திருந்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு இரண்டாவது தவணையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது தமக்கு முதல் கட்ட கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக லீ தெரிவித்திருந்தார். தொடர்ச்சியான சிகிச்சைக்குப் பிறகு அவர் அந்நோயிலிருந்து குணமடைந்தார்.

கடந்தாண்டு தொடக்கத்தில் புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற 15வது மாநிலத் தேர்தலில் கோல குபு பாரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன் பிறகு, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்புச் சடங்கில் மட்டுமே லீ கலந்து கொண்டார். அவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் கசிந்த வேளையில் கடந்தாண்டு நவம்பர் மற்றும் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்வதிலிருந்து அவருக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டிருந்தது.

லீயின் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்ட மந்திரி புசார், அன்னாரின் மறைவு அனைவருக்கும் பேரிழப்பாகும் என்றார்.

சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பிருந்தே பல்வேறு சேவைகளை வழங்கி வந்த லீயின் மறைவினால் ஏற்பட்ட இழப்பை கோல குபு பாரு தொகுதி மக்கள் அதிகம் உணர்வார்கள் என அவர் தெரிவித்தார்.

அனுபவம் வாய்ந்த தலைவரை இழந்து நிற்கும் அன்னாரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஜசெக உறுப்பினர்களுக்கு மாநில அரசின் சார்பில் அவர் அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.

மார்ச் 16ஆம் தேதி பிறந்த லீ, இரு தினங்களுக்கு முன்னர் தனது 58வது பிறந்த நாளைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த லீ மலாயா பல்கலைக்கழகத்தில் பொருளாதார வளத்துறையில் இளங்கலை பட்டமும்  நூலக மற்றும் தகவல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்


Pengarang :