ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பயணப் பெட்டியில் 500,000 வெள்ளி ரொக்கம்- பேரங்காடியில் கண்டுபிடிப்பு

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 21- டாமன்சாராவிலுள்ள பேரங்காடி ஒன்றின் கார்  நிறுத்துமிடத்தில் 500,000 வெள்ளிக்கும் அதிகமான தொகை வைக்கப்பட்டிருந்த பயணப் பெட்டி ஒன்றை பாதுகாவலர் கண்டு பிடித்தார்.

 நடுத்தர அளவு கொண்ட இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற பயணப்பெட்டி பெரும் தொகையுடன் கண்டு பிடிக்கப்பட்டது தொடர்பில் 30 வயது மதிக்கத்தக்க பாதுகாவலரிடம் இருந்து தாங்கள் நேற்று காலை புகாரைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

அந்த பெட்டியை சோதனையிட்ட போது அதில் 10, 50, மற்றும் 100 வெள்ளி நோட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து மொத்த தொகை 500,000 வெள்ளிக்கும் அதிகமாக இருக்கும். அவை அசல் நோட்டுகளாக இருக்கக் கூடும் என கருதப்பட்டாலும் அதை உறுதிப்படுத்த நாங்கள் பேங்க் நெகாராவின் உதவியை நாட உள்ளோம் என்று அவர் சொன்னார்.

அந்த பேரங்காடி வளாகத்திலுள்ள கண்காணிப்பு கேமராக்களை தாங்கள் சோதனை போட்டதாகவும் எனினும், அந்த பெட்டி வைக்கப்பட்டிருந்த இடம் அந்த கேமராவில்  பதிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் தாங்கள் விசாரணை அறிக்கையை திறந்துள்ளதாக இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.

அந்த பயண பெட்டியைத் தவறவிட்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அந்த பணத்தை யாரும் கோராவிட்டால் அது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு பேங்க் நெகாரா விடம் ஒப்படைக்கப் படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :