ANTARABANGSA

சிங்கை முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு எதிராக மேலும் 8 ஊழல் குற்றச்சாட்டுகள்

சிங்கப்பூர், மார்ச் 25 – சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது  மேலும் 8 ஊழல் குற்றச்சாட்டுகள் இன்று சுமத்தப்பட்டதாக அந்நாட்டின் லஞ்ச ஒழிப்பு அமைப்பு கூறியது. அந்நாட்டில் நிகழ்ந்த  உயர்மட்ட ஊழல் வழக்குகளில் ஒன்றாக இது விளங்குகிறது.

அமைச்சராக இருந்தபோதுபோக்குவரத்து அமைச்சுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்த  நபரிடமிருந்து சுமார் 18,956  சிங்கப்பூர் டாலர் (66,546 மலேசிய ரிங்கிட்) மதிப்புள்ள ஆடம்பரப் பொருட்களைப் பெற்றதும் இந்த கூடுதல் குற்றச்சாட்டுகளில் அடங்கும் என்று ஊழல் நடைமுறைகள் புலனாய்வுப் பணியகம் (சி.பி.ஐ.) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

ஈஸ்வரன் இப்போது மொத்தமாக 35 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். ஆசியாவின் முக்கிய  நிதி மையமாக விளங்கும் சிங்கப்பூர்,  ஊழல் மற்றும் அரசியல் முறைகேடுகள்  அரிதாகவே நிகழக்கூடிய ஒரு தூய்மையான அரசாங்கமாக தன்னை பெருமைப்படுத்திக் கொண்டுள்ளது.

அந்நாட்டில் அமைச்சர் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கு ஆகக்கடைசியாக 1986ஆம் ஆண்டு நடந்தது.  லஞ்சம் வாங்கியதாக விசாரணை நடத்தப்பட்ட  தேசிய வளர்ச்சித்துறை அமைச்சர்  நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவதற்கு முன்பே  இறந்துவிட்டார்.

61 வயதான ஈஸ்வரன் தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈஸ்வரனுக்கு எதிராக கடந்த ஜனவரி 18ஆம்  தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் ஊழல் மற்றும் நீதியின் செயல்பாட்டைத் தடுத்தல் ஆகியவையும் அடங்கும். ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 100,000  சிங்கப்பூர் டாலர் (351,000 வெள்ளி) வரை அபராதம் அல்லது ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

கடந்தாண்டு ஜூலை மாதம்  ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார்.  சொத்துடைமை தொழிலதிபர் ஓங் பெங் செங்கின் வர்த்தக நடவடிக்கைக்கு உதவுவதற்காக அவரிடமிருந்து 384,340 சிங்கப்பூர் டாலரை  கையூட்டாகப் பெற்றதாகக்  கூறப்படுகிறது.


Pengarang :