ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இஸ்ரேலிய ஆடவருக்கு  சுடும் ஆயுதம் விநியோகம்- தம்பதியர் உள்பட மூவர் கைது

கோலாலம்பூர், மார்ச் 30 – இம்மாதம்   27ஆம் தேதி  ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்யப்பட்ட  இஸ்ரேலிய நபருக்கு துப்பாக்கி விநியோகம் செய்த சந்தேகத்தின் பேரில் ஒரு தம்பதியர் மற்றும்  அவ்வாடவருக்கு ஓட்டுநராக செயல் பட்டதாக நம்பப்படும் உள்ளூர் நபர் உள்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாற்பது  மற்றும் 42 வயதுடைய தம்பதியினர் நேற்றிரவு 7.30 மணியளவில் கோல சிலாங்கூரில் உள்ள ரமலான் சந்தையில்  கைது செய்யப்பட்டதாக  தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணையின் போது  அத்தம்பதியரின் ஹோண்டா ஜாஸ் காரில் கைத்துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இஸ்ரேலியரிடம் ஒப்படைப்பதற்காக  அண்டை நாட்டில் கைத்துப்பாக்கியை வாங்கியதை தம்பதியினர் ஒப்புக்கொண்டனர் என்று அவர்  கூறினார் .

பகாங் மாநிலத்தின்  கேமரன் ஹைலண்ட்ஸில் இஸ்ரேலியருக்கு ஓட்டுநராக செயல்பட்ட 38 வயது நபரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் அனைவரும் விசாரணைக்காக  இன்று முதல் ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில்  வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஸாருடின் கூறினார்.

கடந்த புதன்கிழமை ஜாலான் அம்பாங்கில் உள்ள ஹோட்டலில் ஆறு துப்பாக்கிகளுடன் இஸ்ரேலியர் நபர்  ஒருவர் கைது செய்யப்பட்டதாக ரஸாருடின் நேற்று  கூறியிருந்தார்.

36 வயதான அந்நபர் கடந்த  மார்ச் 12ஆம் தேதி  ஐக்கிய அரபு சிற்றரசிலிருந்து   பிரெஞ்சு கடப்பிதழைப் பயன்படுத்தி  மலேசியாவிற்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது. மேலும் குடும்ப தகராற்றில் மற்றொரு இஸ்ரேலிய நாட்டவரை தேடிக் கொல்ல  தாம் மலேசியா வந்ததாக அவ்வாடவர் விசாரணையில்  தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்  வரும் மார்ச் 31 வரை விசாரணைக்காகத் வைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு  1966ஆம் ஆண்டு கடப்பிதழ்  சட்டத்தின் 12வது பிரிவு  மற்றும் 1971ஆம் ஆண்டு  சுடும் ஆயுதச் சட்டத்தின்   (அதிகரிக்கப்பட்ட அபராதங்கள்)  7வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.


Pengarang :