ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சமூக இடைவெளியை குறைக்கும் நோக்கில் சமூக நலத்திட்டங்கள் அமல்  – மந்திரி புசார்

அம்பாங், ஏப் 7- இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐ.எஸ்.பி.)  முன்னெடுப்பின் மூலம் நாற்பதுக்கும் மேற்பட்ட நலத் திட்டங்களை அமல்படுத்தியிருப்பது  மக்களின் சமூகப் பொருளாதார இடைவெளியைக் குறைக்கும் மாநில அரசின் கடப்பாட்டிற்குச் சான்றாக விளங்குகிறது.

மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் அதிகத் திட்டங்களை அமல்படுத்திய மாநிலமாக சிலாங்கூர்  விளங்குகிறது  என்று  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த முன்னெடுப்புகள் கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இத்திட்டங்கள்  அனைத்தும் சமூகங்களுக்கு இடையே  உள்ள வெற்றிடங்களை  நிரப்ப முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுத்தப் படுகிறது. இரக்கமும் அன்பும் நிறைந்த அரசை உருவாக்க வேண்டும் என்ற அரசு நிர்வாகத்தின் விருப்பத்திற்கு ஏற்ப இது அமைந்துள்ளது என்றார் அவர்.

நாங்கள் செய்வது என்னவென்றால், உண்மையிலேயே  உதவி தேவைப்படுபவர்கள் மீது கவனம் செலுத்துகிறோம். நிதியுதவி அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை 200 வெள்ளியிலிருந்து 300 வெள்ளியாக  உயர்த்தியுள்ளோம். மேலும்  ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளுக்கான மதிப்பை  வெ.200 ஆக இரட்டிப்பாக்கியுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு, எம்.பி.ஐ. எனப்படும்  மந்திரி புசார் கழகத்தின் ஏற்பாட்டில் உலு கிளாங் தொகுதியைச் சேர்ந்த 500 குடும்பங்களுக்கு நோன்புப் பெருநாள் உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் அவர் இதனைக் கூறினார்.

கடந்த 2008ல் பக்காத்தான் ஹராப்பான் அதிகாரத்தை கைப்பற்றியபோது, ​​சிலாங்கூர் அரசாங்கம் ‘மக்கள் மயப் பொருளாதாரம்’ எனும்  கருப்பொருளின் கீழ் ஏழு நலத்திட்டங்களை அறிமுகம் செய்தது.

கடந்த  2017 ஆம் ஆண்டில் ‘பெடுலி ராக்யாட்’ முன்னெடுப்பின் கீழ்   43 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் அது 33 ஆக குறைக்கப்பட்டது.

தற்போது ஐ.எஸ்.பி. முன்னெடுப்பின் கீழ் 46 நலத் திட்டங்கள் 60 கோடி வெள்ளி ஒதுக்கீட்டில் அமல் செய்யப்பட்டு வருகின்றன.


Pengarang :