ECONOMYMEDIA STATEMENT

குறைவான பங்கேற்பின் எதிரொலி- மகளிர் புட்சால் உள்ளிட்ட போட்டிகள் சுக்மாவிலிருந்து  நீக்கம்

கூச்சிங், 6 ஏப்ர ;  சரவா மாநிலத்தில் வரும் ஆகஸ்டு மாதம் நடைபெறவுள்ள 21வது மலேசியப் போட்டியில் (சுக்மா) மகளிர் புட்சால் மற்றும் 10 மீட்டர் உயரத்திலிருந்து குதிக்கும் பெண்கள் நீச்சல் (10 மீட்டர் பெண்கள் பிளார்ட்பார்ம்) ஆகிய போட்டிகள் இடம் பெறாது.

குறைவான பங்கேற்பு காரணமாக அவ்விரு போட்டிகளும் சுக்மா விளையாட்டிலிருந்து இம்முறை நீக்கப்படுவதாக சரவா மாநில இளைஞர். விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா கூறினார்.

எந்தவொரு போட்டியையும் சுக்மாவில் சேர்ப்பதாக இருந்தால் குறைந்தது ஆறு குழுக்களின் பங்கேற்பு இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும் என்று அவர் சொன்னார்.

பத்து மீட்டர் பெண்கள் பிளாட்ர்பார்ம் போட்டி சரவா மாநிலத்திற்கு தங்கத்தைப் பெற்றுத் தரும் வாய்ப்பினை கொண்டுள்ளது. இந்த போட்டியில் நான்கு மாநிலங்கள் மட்டுமே பங்கேற்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இது உண்மையில் எனக்கு வருத்தத்தைத் தருகிறது என்று அவர் தெரிவித்தார்.

மகளில் புட்சால் போட்டிக்கும் நான்கு மாநிலங்கள் மட்டுமே குழுக்களை அனுப்புகின்றன. அதிகமான விளையாட்டாளர்களை உள்ளடக்கிய விளையாட்டுகளில் வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் செலவைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் விளையாட்டாளர்களை அனுப்புவதில்லை என்று அவர் சொன்னார்.

இங்குள்ள பாடாங் மெர்டேக்காவில் ஜூ பெரேம்பா சங்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த 1999 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு 21வது சுக்மா போட்டியை ஏற்று நடத்தும் வாய்ப்பு சரவா மாநிலத்திற்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. சுக்மா போட்டி ஆகஸ்டு 17 முதல் 24 வரை நடைபெறும் வேளையில் பாரா சுக்மா போட்டி செப்டம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும்.


Pengarang :