MEDIA STATEMENTNATIONAL

நாட்டை உயரிய நிலைக்கு கொண்டுச் செல்ல மலேசியர்களிடையே ஒற்றுமை அவசியம்- பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர், ஏப் 10- மலேசியாவை அனைவராலும் மதிக்கத்தக்க உயரத்திற்கு கொண்டுச் செல்ல இன, சமய வேறுபாடின்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களிடையே ஒற்றுமை நிலவுவது அவசியமாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

எந்த காரணத்திற்காகவும் பெரிய அல்லது சிறிய தரப்பினர்,  பிரிவினர் அல்லது சமூகத்தை நாடு புறக்கணிக்கவோ சிறுமைப்படுத்தவோ முடியாது என்று நோன்பு பெருநாளை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டார்.

அதேசமயம், நாட்டின் உருவாக்கத்திற்கான கட்டமைப்பில் கூட்டரசின் அதிகாரப்பூர்வ மதமான இஸ்லாத்தின் முக்கியத்துவத்தையும் நாட்டிலுள்ள ஷரியா சட்டங்களின் முன்னுரிமையையும் யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

உண்மையைச் சொல்வதானால், பிளவுபடாத நமது கடப்பாடுகளை நிலைநிறுத்துவதற்கும் கௌரவமிக்க தேசத்தின் உருவாக்கத்திற்கும் நாம் ஒன்றுபட்டு உறுதியாக நிற்க வேண்டும் என அவர் சொன்னார்.

அதே சமயம், மற்றவர்களின் கலாசார நடைமுறை மற்றும் வாழ்க்கை முறையை சிறுமைப்படுத்தவோ அவமதிக்கவோ அல்லது சீர்குலைக்கவோ இதனை ஒரு வாய்ப்பாக கருதக் கூடாது என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

பிரதமரின் இந்த நோன்புப் பெருநாள் உரை உள்நாட்டு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிரபரப்பப்பட்டது.

ஆசீர்வதிக்கப்பட்ட நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் மலேசியர்களின் உணர்வில்  இந்த சமநிலையும் சமத்துவமும் கட்டிக்காக்கப்படுவது அவசியமாகும் என அன்வார் கூறினார்.


Pengarang :