MEDIA STATEMENTNATIONAL

மாமன்னர் தம்பதியரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

கோலாலம்பூர், ஏப் 10- மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா தம்பதியர் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் நோன்புப் பெருநாள்  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

கடந்த ரம்ஜான் மாதத்தின் போது செய்யப்பட்ட அனைத்து நற்காரியங்களும்  அல்லாவினால் ஆசீர்வதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று தாங்கள் பிரார்த்தனை செய்வதாக சுல்தான் இப்ராஹிமின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அரச தம்பதியர் தெரிவித்தனர்.

ஷியாவால் மாதம் மகிழ்ச்சி, அருளப்பட்ட கருணை மற்றும் நன்றியுடனும் வரவேற்கப்படுகிறது என்று பேரரசர் கூறினார்.

இனம் மற்றும் மதம் பாராமல் சமூகத்தின் அனைத்து நிலையிலான மக்களும் நட்பு மற்றும் உறவுகளை வலுப்படுத்தவும் சமூகத்தில் ஒற்றுமையை மேம்படுத்தவும்  இல்லங்களுக்குச் சென்று ஒருவரை ஒருவர் சந்தித்து ஷியாவாலைக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அனைத்துத் தரப்பினரும்  குறிப்பாக குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்  மன்னிப்புப் பெற இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

தர்க்கங்கள் தவிர்க்க முடியாதவை. மேலும் சக மனிதர்களுடனான நமது உறவுகள் பாதிக்கப்பட அல்லது புண்படுத்தப்பட நிச்சயம் வாய்ப்புள்ளது.  இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மாதம் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டவும்  இரக்க உணர்வுகளை உயர்த்தவும் உதவும் என அவர் சொன்னார்.


Pengarang :