ரெம்பாவ், ஏப் 10- அந்தியத் தொழிலாளர்களின் கொங்சி குடியிருப்பில்  நிகழ்ந்த கொள்ளையின்போது  நான்கு தொழிலாளர்கள் கொள்ளையர்களால் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தப்பட்டனர்.

தஞ்சோங் கிளிங், கம்போங் செனாவாவில் நேற்று அதிகாலை 3.50 மணியளவில்  நிகழ்ந்த இந்த சம்பவத்தின் போது தொழிலாளி ஒருவரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

முகமூடி அணிந்த ஐந்து கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் அந்த கொங்சி வீட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாக ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி ஷேக் அப்துல் காதர் ஷேக் முகமது  கூறினார்.

அவ்வீட்டிலிருந்த 21 முதல் 45 வயது வரையிலான மூன்று வங்காளதேசிகள் மற்றும் ஒரு மியன்மார் பிரஜையை சரமாரியாகத் தாக்கி காயப்படுத்திய அக்கொள்ளையர்கள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து   மூன்று கைப்பேசிகள் மற்றும் 3,400 வெள்ளி ரொக்கத்துடன் தப்பினர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் மூவருக்கு தலையில்
காயங்கள் ஏற்பட்ட வேளையில் மற்றொரு ஆடவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் சிரம்பான் துவாங்கு ஜாபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 395/397 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.