MEDIA STATEMENTNATIONAL

வானமோட்டி தாக்கப்பட்ட விவகாரம்- நான்கு பாகிஸ்தானியர்கள் கைது

ஈப்போ, ஏப் 12- சாலை விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனமோட்டி ஒருவரை தாக்கியதாக கூறப்படும் நான்கு பாகிஸ்தானிய பிரஜைகளை போலீசார் கைது செய்துள்ளனர். தெலுக் இந்தான்-பீடோர் சாலையின் 16வது கிலோ மீட்டரில் நிகழ்ந்த அந்த சாலை விபத்தில்  மூன்று பாகிஸ்தானியர்கள் உயிரிழந்ததன் எதிரொலியாக அந்த வாகனமோட்டி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வாகனமோட்டி மற்றும் நான்கு ஆடவர்கள் சம்பந்தப்பட்ட கைகலப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட  காணொளி மூலம் அந்த நான்கு சந்தேகப் பேர்வழிகளும் அடையாளம் காணப்பட்டு நேற்று மாலை 4.20 அளவில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமது அட்னான் பாஸ்ரி கூறினார்.

நேற்று காலை 8.10 மணியளவில் அந்த விபத்து நிகழந்தத்தை தொடர்ந்து அதன் ஓட்டுநருக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கஞ்சா போதைப் பொருளை உட்கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் அந்த 36 வயது காரோட்டி தாம் தாக்கப்பட்டது தொடர்பில் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் போலீசில் புகார் செய்தார் என அவர் குறிப்பிட்டார்.

தலையில் ஏற்பட்ட காயங்கள் தவிர அந்த ஆடவருக்கு பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்ட போது கூறினார்.

நேற்று முன்தினம் காலை, நோன்புப் பெருநாளை முன்னிட்டு தொழுகையில் கலந்து கொள்ள பள்ளிவாசல் நோக்கிச் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் ஒன்று மோதியதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு மேலும் மூவர் கடுமையான காயங்களுக்குள்ளாயினர்.

உணவகம் ஒன்றில் உதவியாளராக வேலை செய்யும் அந்த நபர் ஓட்டிச் சென்ற புரோட்டோன் சாகா ரகக் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த பாகிஸ்தானியர்களை மோதியது.

இதனிடையே, இந்த மரண விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த கார் ஓட்டுநர் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


Pengarang :