ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இஸ்ரேலின் கோரத் தாக்குதல்- ஹமாஸ் தலைவர் இஸ்மாயிலுக்கு பிரதமர் அனுதாபம்

கோலாலம்பூர், ஏப் 12- இஸ்ரேலிய வான் தாக்குதலில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் சிலரை பறிகொடுத்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனேயேவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தொடர்பு கொண்டு  தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

ஹனியேவின் மகன்களான ஹஸிம், அமீர், முகமது ஆகியோருடன் நான்கு பேரப்பிள்ளைகளும் கொல்லப்பட்ட அந்த கோரத் தாக்குதல் தொடர்பான தகவலை அறிந்தவுடன் நேற்று மாலை பிரதமர் அந்த ஹமாஸ் முன்னணித் தலைவரை உடனடியாகத் தொடர்பு கொண்டார். 

தனது குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ள இஸ்மாயில் குடும்பத்தினருக்கும் அனைத்து பாலஸ்தீனர்களுக்கும்  அனுதாபம் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களுக்கு ஒட்டுமொத்த மலேசியர்களின் சார்பில் பிளவுபடாத ஆதரவையும் ஒருமைப்பாட்டு உணர்வையும் நாங்கள் வெளிப்படுத்துகிறோம் என்று அவர் சொன்னார்.

எந்த பாவமும் அறியாதவர்கள் குறிப்பாக இளம் பிள்ளைகளுக்கு இத்தகைய கோரமான முடிவு ஏற்பட்டது எந்த மனிதராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை நிகழ்த்தி வரும் இஸ்ரேலிய ஜியோனிஸ அரசாங்கத்தின் இந்த மனிதாபிமானமற்றச் செயலை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய அரசாங்கத்தின் இந்த இழிச்செயல், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு வலியுறுத்தியிருந்த போர் நிறுத்தத்தை அமல் செய்யும் எண்ணம் அந்நாட்டிற்கு அறவே இல்லை என்பதை இது நிரூபிக்கிறது. அனைத்துலகச் சட்டங்கள் மற்றும் கோட்பாடுகளை அந்நாடு அறவே மதிக்கவில்லை என்பதையும் இது புலப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

ஸியோனிச அரசாங்கத்தின் இந்த கோழைத்தனமான நடவடிக்கை முடிவை இல்லாது நீடித்து வரும் பிரச்சனைக்கு அமைதியான முறையிலும் அனைத்துலக மனித உரிமை மற்றும் மனுக்குல கோட்பாடுகளுக்கு உட்பட்டும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை சிதறடித்துள்ளது என்றும் அவர் சொன்னார். 


Pengarang :