MEDIA STATEMENTNATIONAL

கோல  குபு பாரு இடைத்தேர்தல்- ஹராப்பான் வேட்பாளர் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை- அன்வார்

உலு சிலாங்கூர், ஏப் 12 – சிலாங்கூர் மாநிலத்தின்  கோல குபு பாரு தொகுதி  இடைத்தேர்தலுக்கான பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

“நான் யாருடனும் (இடைத்தேர்தல்) இது பற்றி விவாதிக்கவில்லை” என்று ஹராப்பான் கூட்டணியின்  தலைவருமான அவர் செய்தியாளர்களிடம்  சுருக்கமாக கூறினார்.

முன்னதாக அவர்,  இங்குள்ள பண்டார் உத்தாமா பத்தாங்காலி பள்ளிவாசலில்  நடைபெற்ற நோன்புப் பெருநாள் விருந்து மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்டார்.

கோல குபு பாரு தொகுதி  இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  ஏப்ரல் 27 ஆம் தேதியும்   தொடக்கக் கட்ட வாக்களிப்பு  மே 7ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே அண்மையில் தெரிவித்துள்ளார்.

ஜசெக பிரதிநிதியான லீ கீ ஹியோங் புற்று  நோய் காரணமாக  கடந்த மார்ச் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 58 வயதான லீ,  கடந்த 2013 முதல்  மூன்று தவணைகளாக கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.

கடந்த  2022 இல் நடைபெற்ற   நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்குப்  பிறகு நடைபெறும் ஏழாவது இடைத்தேர்தல்  இதுவாகும்.  இதற்கிடையில், பண்டார் உத்தாமா பத்தாங் காலி பள்ளிவாசலில் நடைபெற்ற  வெள்ளிக்கிழமை தொழுகைக்காக கிட்டத்தட்ட 500 பேர் பங்கேற்றனர்

பிற்பகல்  12.24 மணிக்கு பள்ளிவாசல்  வந்த பிரதமரை  முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ முகமது முகமது தாயிப், மாநில வீடமைப்பு மற்றும் கலாச்சாரத்  துறைக்கான  ஆட்சிக் குழு உறுப்பினர் போர் ஹான் அமான் ஷா மற்றும் பள்ளிவாசல் அதிகாரிகள் வரவேற்றனர்.


Pengarang :