MEDIA STATEMENTNATIONAL

இஸ்ரேலின் வான் தாக்குதலில்  25 பேர் பலி

காஸா, ஏப் 13 – கடந்த வெள்ளிக்கிழமை காஸா  பகுதியில் உள்ள வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில்  25 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்தனர்.

மத்திய காஸா  நகரத்தின் தராஜ் வட்டாரத்தின்  சித்ரா பகுதியில் உள்ள தபாதிபி  குடும்பத்தினர் தங்கியுள்ள  ஒரு வீட்டைக் குறிவைத்து ஆக்கிரமிப்புப் படைகளின் விமானங்கள்  தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக  பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபா கூறியது.

இதன் விளைவாக 25 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு மேலும் பலர்  காயமடைந்தனர்.

ஆக்கிரமிப்பு போர் விமானங்கள் மத்திய காஸா பகுதியிலுள்ள நுசிராட் முகாமின் வடக்குப் பகுதிகளையும் குறிவைத்தன. அதே நேரத்தில் அந்நாட்டு இராணுவம் முகாமுக்கு வடக்கே பல கட்டிடங்களையும் தாக்கி  தகர்த்தது என்று அந்த செய்த நிறுவனம்  தெரிவித்தது.

நூசெய்ராட் முகாமில் மக்கள்  அடைக்கலம் புகுந்துள்ள  பள்ளியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்த நிலையில்  பாதிக்கப்பட்ட மக்கள் அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என்று  மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இதனிடையே,  13 பேரின் அழுகிய  உடல்களை அல்-பலாட் பகுதி மற்றும் காசா பகுதியின் தெற்கே உள்ள கான் யூனிஸ் கவர்னரேட்டில் உள்ள அல்-அமல் பகுதியிலிருந்து  ஆம்புலன்ஸ் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுவினர் மீட்டனர்.

மருத்துவ ஆதாரங்களின்படி அக்டோபர் 7 முதல் காஸா பகுதியில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 33,545 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும்  சிறார்கள் ஆவர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 76,094 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :