SELANGOR

‘பெண்‘ திட்ட அமலாக்கத்திற்கு மாநில அரசு உதவும்- பாப்பாராய்டு தகவல்

ஷா ஆலம், ஏப் 17- ‘பெண்‘ எனப்படும் வளப்பம், ஆளுமை மற்றும் வழமை
திட்டத்தை சிலாங்கூரில் அமல்படுத்துவது தொடர்பில் மாநில வறுமை
ஒழிப்பு ஆட்சிக்குழு தொழில்முனைவோர் ஆட்சிக்குழுவுடன் சந்திப்பு
நடத்தவுள்ளது.

இந்திய மகளிர் தொழில்முனைவோருக்கு உதவும் நோக்கிலான இந்த
‘பெண்‘ திட்டத்திற்காக 5 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்த ஒற்றுமை
அரசாங்கத்தின் நடவடிக்கையை தாம் பெரிதும் வரவேற்பதோடு
இத்திட்டத்தின் வெற்றியை உறுதி செய்ய இதன் தொடர்பான
தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் தாங்கள் தயாராக உள்ளதாக மாநில
மனித வள மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.

இந்திய சமூகத்தில் உதவி தேவைப்படும் நிலையிலுள்ள மகளிர் மற்றும்
தொழில்முனைவோர் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறுவதை உறுதி
செய்வதற்கு இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறை
ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமியுடன் தாம் விரைவில்
சந்திப்பு நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்டத் தரப்பினர் பயன் பெறுவதற்கு ஏதுவாக
இத்திட்டத்தை எவ்வாறு முறையாக அமல்படுத்துவது என்பது குறித்து
நாங்கள் விவாதிக்கவுள்ளோம்.

இந்த திட்டம் தொடர்பில் மாநில அரசிடமிருந்து உதவிகள் மற்றும்
தகவல்கள் தேவைப்படுமாயின், சம்பந்தப்பட்ட அமைச்சு அல்லது அரசு
துறைகளுக்கு வழங்கி உதவவும் தயாராக உள்ளோம் என்றார் அவர்.

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சின்
முயற்சியிலான இந்த திட்டம், இந்திய தொழில் முனைவோருக்கு
ஊக்குவிப்பாகவும் வர்த்தகத்தின் வாயிலாக வாழ்க்கைத் தரத்தை சமூகம் உயர்த்திக் கொள்வதற்குரிய வாய்ப்பாகவும் அமையும் என தாம் நம்புவதாக பாப்பாராய்டு தெரிவித்தார்.

மகளிர் தொழில்முனைவோருக்கு ஆக்கத்திறனளிப்பதை இலக்காக
கொண்ட இந்த ‘பெண்‘ திட்டம் வெற்றியடைவதற்கு இந்த நிதி முறையாக
விநியோகிக்கப்படும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.

இந்திய பெண் தொழில்முனைவோருக்கு உதவும் நோக்கிலான இந்த
‘பெண்‘ திட்டத்திற்கு அமானா இக்தியார் மலேசியா (ஏ.ஐ.எம்.) 5 கோடி
வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தொழில்முனைவோர் மேம்பாடு
மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் கடந்த
ஏப்ரல் 13ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :