NATIONAL

சருகுமான் உடல் பாகங்களை வைத்திருந்ததாக எட்டு எஃப்.ஆர்.யூ. உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு

சிரம்பான், ஏப் 18- பாதுகாக்கப்பட்ட வன விலங்கான சருமானின் எட்டு
உடல் உறுப்புகளை வைத்திருந்ததாக மத்திய சேமப் படை (எஃப்.ஆர்.யூ.)
உறுப்பினர்கள் எண்மர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று
குற்றஞ்சாட்டப்பட்டது.

முப்பதாறு முதல் 50 வயது வரையிலான ருஸ்லி சே ஓமார், முகமது
காலிட் இப்ராஹிம், அசாருடின் யாஹ்யா, முகமது இஷாமுடின்
ஜைனோல், முகமது யூசுப் முகமது யூனுஸ், மஹாட்ஸிர் ஓஸ்மான்,
ஜெசிஸ் ஜோசப் ஆகிய அந்த எண்மரும் தங்களுக்கு எதிரான
குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

தங்கள் வாகனத்தின் பின்புறம் தோம்பு ஒன்றில் சருமானின் எட்டு உடல்
பாகங்களை முறையான அனுமதியின்றி வைத்திருந்ததாக அந்த பாதுகாப்பு
படை உறுப்பினர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி பிற்பகல் 1.00 மணியளவில்
கோல பிலா, எம்பாங்கான் தாலாங், ஜாலான் பெசார் கம்போங் தாலாங்கில்
இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில்
கூறப்பட்டுள்ளது.

தண்டனைச் சட்டத்தின் 60(1) வது பிரிவின் கீழ் தண்டனை விதிக்க வகை
செய்யும் அதே சட்டத்தின் 34 வது பிரிவு மற்றும் தண்டனைச் சட்டத்தின்
60(1)(பி) பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு
வரப்பட்டுள்ளது.

இச்சட்டப் பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு 50,000
வெள்ளி வரையிலான அபராதம், ஈராண்டுகளுக்கும் மேற்போகாத சிறை
அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தலா 2,000 வெள்ளி ஜாமீனில்
விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி மஸ்னி நாவி, இந்த வழக்கு
விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Pengarang :