ANTARABANGSA

ஹிட்லரை மிஞ்சியது இஸ்ரேல்- காஸாவில் 14,000 சிறார்கள் படுகொலை – துருக்கி அதிபர் குற்றச்சாட்டு

அங்காரா, ஏப் 18- காஸாவில் எந்த பாவமும் அறியாத 14,000க்கும் மேற்பட்ட சிறார்களைப் படுகொலை செய்ததன் மூலம் நாஜி தலைவர் அடோல்ப் ஹிட்லரையும் இஸ்ரேல் மிஞ்சி விட்டது என்று துருக்கிய அதிபர் கூறினார்.

மேற்கத்திய நாடுகளின் நிபந்தனையற்ற ஆதரவின் வாயிலாக காஸா மற்றும் மேற்கு கரையில் இஸ்ரேல் மேற்கொண்ட இந்த இனப்படுகொலை மனுக்குல வரலாற்றில் அழிக்க முடியாத களங்கமாக இருக்கும் என்று அதிபர்  ரிக்கேப் தாயிப் எர்டோகன் தெரிவித்தார்.

பாலஸ்தீன விவகாரத்தில் துருக்கியின் உணர்வுகள் குறித்து யாரும் கேள்வியெழுப்ப முடியாது எனக் கூறிய அவர், பாலஸ்தீனப் போராட்டம் தனது வாழ்வில் புதிய அர்த்தத்தைக் கொடுத்துள்ளது என்றார்.

அல்லா எனக்கு உயிர் கொடுக்கும் காலம் வரை பாலஸ்தீன போராட்டத்திற்கு நான் ஆதரவளித்து வருவேன். ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் குரலாக நான் ஒலிப்பேன் என்று அவர் சொன்னார்.

பாலஸ்தீன எதிர்ப்புத் தரப்பினரான ஹமாஸ் இயக்கத்துடன் 100 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த துருக்கியின் விடுதலைப் போரை ஒப்பிட்டு பேசிய எர்டோகன், இதனைச் சொல்வதானால் கொடுக்க வேண்டிய விலை என்ன என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்றார்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர சுவிட்ஸர்லாந்தின் டேவோசில் நடைபெற்ற 2009 உலகப் பொருளாதார ஆய்வரங்கில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து இஸ்ரேலுக்கு எதிராக தாம் சவால் விடுத்ததையும் அது வைரலாகி ஒரு நிமிட எதிர்ப்புக்கு வழி வகுத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வேறு யாரும் சொல்லத் துணியாத போது, நாங்கள் எழுந்து நின்று சொல்கிறோம், ‘ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அல்ல, அது எதிர்ப்பாளர்கள் குழு‘ என அவர் முழக்கமிட்டார்.

கடந்த 70 ஆண்டுகளாக இஸ்ரேல் எவ்வாறு பாலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமித்து வருகிறது என்பதைக் காட்டும் வரைபடத்தையும் தாங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கல் செய்துள்ளதாக அவர் கூறினார்.


Pengarang :