SELANGOR

மாநில அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக பி40 தரப்பினருக்குத் தொடர்ந்து உதவி – பாப்பாராய்டு உறுதி

பத்தாங் காலி, ஏப் 18- பல்வேறு உதவித் திட்டங்கள் வாயிலாக குறைந்த
வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு மாநில அரசு தொடர்ந்து உதவி
வருவதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.

மாநில அரசு அமல்படுத்தியுள்ள மக்கள் நலன் சார்ந்த பலவேறு
முன்னெடுப்புகளில் பிங்காஸ் எனப்படும் மக்கள் நல்வாழ்வுத் திட்டம்
பெருநாள் கால இலவச பற்றுச் சீட்டு திட்டம் ஆகியவையும் அடங்கும்
என அவர் சொன்னார்.

தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்களுக்கான மானியம் உள்பட பல்வேறு நலத்
திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து மேற்கொள்ள மக்களின் பிளவுபடாத
ஆதரவு தங்களுக்கு தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விரைவில் நடைபெறவிருக்கும் கோல குபு பாரு இடைத் தேர்தலில்
மறவாமல் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை
நிறைவேற்றும்படியும் அத்தொகுதி வாக்காளர்களை அவர் கேட்டுக்
கொண்டார்.

இந்த இடைத் தேர்தலில் இந்தியர்கள் வாக்களிக்க வேண்டாம் என சில
தரப்பினர் கூறுவது ஜனநாயக விரோதச் செயல் என்பதோடு சட்டப்படி
குற்றமும் ஆகும். வாக்களிப்பது நமது ஜனநாயக கடமையாகும் என்றார்
அவர்.

நேற்று, பத்தாங் காலி லீகா மாஸ் பண்டார் உத்தாமா சிலம்ப கிளப்பின்
தலைவர் முரளி முனுசாமி மற்றும் உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக
உறுப்பினர் ராஜேஷ் ராவ் ஏற்பாட்டில் நடைபெற்ற மாணவர்களுக்குப் பள்ளி
உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்
அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் 25 பள்ளி மாணவர்களுக்குப் புத்தகப் பைகள் மற்றும் பி40
பிரிவைச் சேர்ந்த நான்கு குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள்
வழங்கப்பட்டன.

மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில்
உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர்
சத்திய பிரகாஷ் நடராஜன், உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக
உறுப்பினர்களான புவனேஸ்வரன் பச்சை முத்து, துரை அன்பழகன், ஸ்ரீ
காந்த், ஐ-சீட் தலைவர் மாதவன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.


Pengarang :