NATIONAL

கிழக்கு ஜாவாவில் குளிர் எரிமலைக் குழம்பு பெருக்கெடுப்பு- பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் படையெடுப்பு

ஜாகர்த்தா, ஏப் 19- கடந்த வியாழக்கிழமை குமுறத் தொடங்கிய குனோங்
செமெரு மலையிலிருந்து வெளிப்படும் குளிர்ந்த எரிமலைக் குழம்பு
காரணமாகக் கிழக்கு தீமோரின் லுமாஜாங் பகுதியிலுள்ள 32 குடும்பங்கள்
பாதுகாப்பான இடங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

குனோங் செமெரு பகுதியில் நேற்று மாலை முழுவதும் பெய்த கன மழை
காரணமாக ரேகோயோ வடிநிலப்பகுதியில் நீர் பெருக்கெடுத்து குளிர்ந்த
எரிமலைக் குழம்புகள் குடியிருப்புகளைச் சூழத் தொடங்கியுள்ளன.

அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக மூன்று பாலங்களும் ஒரு
முக்கிய சாலையும் சேதமடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும்
பணியை விரைவுபடுத்தும்படி அங்குள்ள படகிற்கு மாவட்ட மீட்பு அமைப்பு
உத்தரவிட்டுள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்யும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி தேசிய
பேரிடர் நிர்வாக அமைப்பு வட்டார அதிகாரிகளைக் கேட்டுக்
கொண்டுள்ளது.

எரிமலைக் குழம்பு வெள்ளம் மீண்டும் ஏற்படும் பட்சத்தில் ஏற்படக்கூடிய
பாதிப்புகளை குறைப்பதற்கு ஏதுவாக ரெகோயோ ஆற்றின் வடிநிலப்
பகுதிகளில் உள்ள பொது மக்கள் மற்றும் வருகையாளர்களின் பாதுகாப்பை
உறுதி செய்யும்படி வட்டார அதிகாரிகளை பேரிடர் நிர்வாக அமைப்பின்
பேச்சாளரான அப்துல் முஹாரி வலியுறுத்தினார்.

இந்தோனேசியாவில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகளில்
இந்த குனோங் செசெரு எரிமலையும் ஒன்றாகும். இந்த எரிமலை கடந்த
வெள்ளிக்கிழமை உள்ளுர் நேரப்படி அதிகாலை 6.45 அளவில் வெடித்தது.
இதன் காரணமாகச் சாம்பல் துகள்கள் 500 மீட்டர் உயரத்திற்கு எழுந்தன.

மலையேறும் நடவடிக்கைகளுக்கு பிரசித்தி பெற்ற இடமான இந்த
செமெரு மலை வளாகம் தற்போது மூன்றாம் கட்ட எச்சக்கை நிலையில்
வைக்கப்பட்டுள்ளது.


Pengarang :