NATIONAL

ராஃபாவில் சிறார்கள் உள்பட 22 பேர் பலி- இஸ்ரேலின் தாக்குதலுக்கு மலேசியா கண்டனம்

புத்ராஜெயா, ஏப் 23- காஸாவின் தென் பகுதி நகரான ராஃபா மீது கடத்ந
21ஆம் தேதி இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட கோரத் தாக்குதலில் 18
சிறார்கள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டது குறித்து மலேசியா கடும்
கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

உயர்ந்த பட்ச மனுக்குல பேரழிவின் தாக்கத்தை கருத்தில் கொள்கையில்
ராஃபா நிலவரம் மிகவும் அச்சமூட்டும் வகையில் உள்ளதாக மலேசியா
வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

ராஃபா மீதான எந்த தாக்குதலும் சுமார் 64 சதுர கிலோ மீட்டர் பகுதியில்
மிகவும் நெரிசலான சூழலில் அடைக்கலம் நாடியுள்ள 15 லட்சம்
பாலஸ்தீனர்களுக்குக் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று அது
தெரிவித்தது.

ராஃபா மீது தாக்குதல் நடத்துவது மிகப்பெரிய தவறாக ஆகும் என்பதால்
அப்பகுதி மீதான தாக்குதல்களை தவிர்க்கும்படி கூட்டு நாடுகள் கடந்த
மாதம் அறிவுறுத்தியிருந்தன. இருந்த போதிலும் இஸ்ரேலின் இந்த
நடவடிக்கை அதன் ஆணவப் போக்கை காட்டுகிறது.

இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பு உயிர்ப்பலிகள் மேலும் அதிகரிப்பதற்குரிய
சூழலை ஏற்படுத்தும். தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு கடந்த
198 நாட்களாக காஸாவின் வடக்கிலிருந்து தப்பியோடி வந்தவண்ணம்
இருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு இறுதி அரணாகவும் புகலிடமாகவும்
ராஃபா விளங்குகிறது.

அவர்கள் தஞ்சமடைவதற்கு வேறு இடங்கள் கிடையாது. கூட்டு நாடுகள்
நிர்ணயித்துள்ள சிவப்பு கோட்டை பொருட்படுத்தாதது அந்நாட்டின்
கோரத்தனம் தொடர்ந்து அதிகரித்து வருவதை புலப்படுத்தும் வகையில்
உள்ளது என்று அந்த அறிக்கை கூறியது.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை உலக நாடுகள் தொடர்ந்து கண்டிக்க வேண்டும்
என்பதோடு பகைமைப் போக்கை உடனடியாக கைவிட்டு பாலஸ்தீன
தேசத்தை அங்கீரிக்க வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.


Pengarang :