NATIONAL

52 ஆண்டு வரலாற்றில் சாதனை-கடந்தாண்டு 930,000 புத்தகங்களை  பி.பி.ஏ.எஸ். இரவல் தந்தது

ஷா ஆலம், ஏப் 23 – சிலாங்கூர் பொது நூலக கழகத்தில் (பி.பி.ஏ.எஸ்.) கடந்தாண்டு இரவல் பெறப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை 930,000  ஆக உயர்ந்தது.  முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை  738,818  பிரதிகளாக இருந்தது.

கடந்த 2023 மார்ச் 1ஆம் தேதி முதல் ஒருவர் இரவல் பெறக்கூடிய  புத்தகங்களின் அதிகப்பட்ச எண்ணிக்கை   10லிருந்து 20 ஆக  அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரவல் பெறும் பிரதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கண்டதாக இளைஞர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

கடந்தாண்டு இரவல் பெறப்பட்ட புத்தகங்களின் அளவு சிலாங்கூர் பொது நூலகத்தின் 52 ஆண்டு கால வரலாற்றில் மிக அதிகமானதாகும் என்றும் அவர் சொன்னார்.

கடந்த ஆண்டு மலேசியர்களின் சராசரி வாசிப்புப் பழக்கம்  வருடத்திற்கு 15 முதல் 20 புத்தகங்கள் வரை  அல்லது வாரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கும் குறைவாகவே இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இருப்பினும், வாசிப்பு மீதான இந்த போக்கு ‘2030 தேசிய வாசிப்பு தசாப்தம்’ என்ற இயக்கத்தின் அமலாக்கம் மூலம்  மாறும் என்று நான் நம்புகிறேன் என்று இன்று இங்கு நடைபெற்ற ‘வாருங்கள் பத்து நிமிடம் வாசிப்போம்’நிகழ்ச்சியில் பேசும் போது அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநில நிலையிலான இந்த நிகழ்ச்சி  ‘படிப்போம் மகிழ்ச்சியாக இருப்போம்’ மற்றும் ‘படித்தல் ஒற்றுமையைப் பாதுகாக்கிறது’ என்ற கருப்பொருளில் இங்குள்ள ராஜா துன் உடா நூலகத்தில் நடைபெற்றது.


Pengarang :