சிரம்பான், மே 5- இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் நாடு முழுவதும் பயனீட்டாளர்களிடமிருந்து 15,753 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 7,711 புகார்கள் உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் ‘அடுவான் சூரி‘ தளத்தின் வாயிலாக பெறப்பட்டன.
‘அடுவான் சூரி‘ தளத்தின் மூலம் மூலம் இணைய பரிவர்த்தனை தொடர்பான புகார்கள் மிக அதிகமாகப் பெறப்பட்டதாக அதன் துணையமைச்சர் பவுஸியா சாலே கூறினார்.
இக்காலக்கட்டத்தில் இணையப் பரிவர்த்தனை தொடர்பாக 2,105 புகார்களும் பொருள் விலை தொடர்பில் 1,978 புகார்களும் தவறான சேவைகள் தொடர்பில் 1,342 புகார்களும் பெறப்பட்டன என்று அவர் சொன்னார்.
இந்த அடுவான் சூரி தளத்தின் வாயிலாக புகார் செய்தவர்களில் ஐம்பது விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் ஆண்களாவர். பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ளதால் இந்த தளம் பயனீட்டாளர்கள் மத்தியில் பிரசித்தி பெற்று வருகிறது. பெறப்பட்ட புகார்களில் 95 விழுக்காட்டிற்கு தீர்வு காணப்பட்டுள்ள வேளையில் எஞ்சிய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
இக்காலக்கட்டத்தில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 479 புகார்கள் பெறப்பட்டன. அவற்றில் 217 புகார்கள் ‘அடுவான் சூரி‘ வாயிலாகச் செய்யப்பட்டது. இவற்றில் 93 விழுக்காட்டுப் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
நேற்று இங்குள்ள சிரம்பான் 2, சென்ட்ரியோ சதுக்கத்தில் 2024 நெகிரி செம்பிலான் மாநில நிலையிலான தேசிய பயனீட்டாளர் தினத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் துணை அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இம் மாநிலத்தை பொறுத்தவரை பொருள் விலை தொடர்பில் 135 புகார்கள் இணைய பரிவர்த்தனை தொடர்பாக 123 புகார்களும் தவறான சேவைகள் தொடர்பில் 58 புகார்களும் அடுவான் சூரி தளத்தின் மூலம் செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.