ECONOMYMEDIA STATEMENTPENDIDIKAN

உலு பெர்ணம் மக்களுக்கு விரைவில் சிறப்பான இணையச் சேவை- மந்திரி புசார் தகவல்

உலு சிலாங்கூர், மே 5- வட்டார மக்களின் வசதிக்காக இம்மாவட்டத்தில் குறிப்பாக உலு பெர்ணமில் இணைய வசதிகள் மேம்படுத்தப்படும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.

பொது மக்கள் குறிப்பாக இணையம் மூலம் வர்த்தகம் புரிவோர் பயன் பெறுவதற்கு சீரான இணையத் தொடர்பு பெரிதும் துணை புரியும் என்று அவர்  சொன்னார்.

உலு சிலாங்கூர் மாவட்டத்தை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். கட்டுபடி விலை வீடுகளின் எண்ணிக்கையை இப்பகுதியில் அதிகரித்துள்ளோம். செரண்டாவில் நிலையத்தைக் கொண்ட கிழக்குக் கரை இரயில் இணைப்புத் திட்டமும் (இ.சி.ஆர்.எல்.) விரைவில் பூர்த்தியாகவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த வசதிகளின் உருவாக்கம் காரணமாக உலு பெர்ணம், சுங்கை திங்கி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வளர்ச்சியின் தாக்கத்தை மக்கள் அனுபவிப்பார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

கோல குபு பாரு தொகுதி ஒற்றுமை அரசின் வேட்பாளரான பாங் சோக் தாவும்  தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் இணையச் சேவையை குறிப்பிட்டுள்ளார்.

மேம்படுத்தப்பட்ட இணையச் சேவையை கோல குபு பாரு மட்டும் அனுபவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியாது. இணைய வர்த்தகர்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்கு ஏதுவாக உலு பெர்ணம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலும் தரம் உயர்த்தும் பணிகளை விரிவு படுத்த வேண்டும் என்றார் அவர்.

நேற்று சுங்கை திங்கி பெல்டாவிலுள்ள செமாய் பக்தி மண்டபத்தில் நடைபெற்ற பெல்டா உறுப்பினர்களுடனான நோன்புப் பெருநாள் உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.. இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு நவீன வசதிகளை உட்புகுத்துவதன் மூலம் உலு சிலாங்கூர் போன்ற நகரங்களை மாநில அரசாங்கம் மறு மேம்பாடு செய்யவுள்ளதாக நேற்று முன்தினம் நடைபெற்ற லெஜெண்டா ஏர்டியா சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவின் போது அமிருடின் கூறியிருந்தார்.


Pengarang :