ECONOMYMEDIA STATEMENT

கோல குபு பாரு, ரவாங் உள்ளிட்ட இடங்களில் இன்று மலிவு விற்பனை

ஷா ஆலம், மே 5-  சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று மேலும் நான்கு தொகுதிகளில் நடைபெறவுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவான விலையில் வழங்கும் இந்த விற்பனை இன்று காலை 10.00 மணி தொடங்கி தாமான் ஜாத்தி, ரவாங் சத்து, முக்கிம் ரவாங் பெங்குளு அலுவலகத்திலும் (ரவாங் தொகுதி), புளோக் 7, ஜாலான் 8/1 செக்சன் 8, ஷா ஆலம் (கோத்தா அங்கிரிக் தொகுதி) எனும் முகவரியிலும்  நடைபெறவுள்ளது.

மேலும், உலுயாங் லாமா, லோ மீ கூடைப்பந்து மைதானம் (கோல குபு பாரு தொகுதி), செக்சன் 23, அல் ஜன்னா பள்ளிவாசல் (கோத்தா அங்கிரிக் தொகுதி) ஆகிய இடங்களிலும் இந்த விற்பனை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்,  ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

வார இறுதி நாட்களில் செகி ப்ரெஷ் பேராங்காடிகளில் நடைபெறும் மலிவு விற்பனையுடன் சேர்த்து இவ்வாண்டில் மாநிலம் முழுவதும் 1,800க்கும் மேற்பட்ட இடங்களில் ஏஹ்சான் ரஹ்மா விற்பனையை நடத்த சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

கடந்தாண்டு நோன்புப் பெருநாளின் போது கோழி மற்றும் முட்டையை மலிவு விலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்ததற்காக பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

ஏஹ்சான்  ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS  என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும்  அறிந்து கொள்ளலாம்.

 


Pengarang :