ECONOMYMEDIA STATEMENT

மத்திய, மாநில அரசுகளிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்  மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்- பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர், மே 5 – மக்களின் நலன் மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு ஏதுவாக  மத்திய மற்றும் கெடா மாநில அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு கருத்து வேறுபாடுகள் தடையாக இருக்காது என தாம் நம்புவதாக பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நேற்றிரவு ஜித்ராவில் நடைபெற்ற கெடா  மாநில அளவிலான மடாணி நோன்புப் பெருநாள்  கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய  பிரதமர், மாறுபட்ட கருத்துக்களை கையாள்வதில் ஒழுக்கம் மற்றும் நடத்தை முறையின் அவசியத்தை வலியுறுத்தினார்.

பொருள் விளக்கங்கள், அணுகுமுறைகள், வியூகங்கள் மற்றும் முன்னுரிமைகள் ஆகியவற்றில் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருக்க இஸ்லாம் அனுமதிக்கிறது. ஆனால் இந்த வேறுபாடுகள் நல்லொழுக்கம் மற்றும் சாதுரியத்துடன் கையாள வேண்டும்  என்று அவர் இன்று தனது  முகநூல்  பதிவில் கூறினார்.

அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், நோன்புப் பெருநாள்  பொது உபசரிப்பு நிகழ்வை  ஏற்பாடு செய்வதில் முழு ஒத்துழைப்பு வழங்கியதற்காக கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோர் மற்றும் மாநில அரசாங்கத்திற்கு அவர் நன்றியையும்  பாராட்டுதலையும் தெரிவித்துக் கொண்டார்

அரிசி உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் கெடாவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை   அன்வார் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார். ஆயினும்  மாநிலத்தில் நெல்  விவசாயிகள் தொடர்ந்து வறுமையை எதிர் கொள்வதையும் அவர் சுட்டிக்காட்டினார்

எனவே, கெடாவின் வளர்ச்சிக்கான முயற்சிகளைச் செயல்படுத்துவதில் குறிப்பாக வறுமையை ஒழிப்பதில் மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு துறைகளுடன் மாநில அரசுடன் நெருக்கமாகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தை நான் வலியுறுத்தினேன்.

நெல்  உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கான முயற்சிகளும் இதில் அடங்கும்.  இதற்கு மத்திய அரசிடமிருந்து 500 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :