NATIONAL

சிலாங்கூர் எஃப்.சி. விளையாட்டாளர் மீது எரிதிராவக வீச்சு- விரிவான விசாரணை நடத்த மந்திரி புசார் வலியுறுத்து

ஷா ஆலம், மே 6- சிலாங்கூர் எஃப்.சி. கால்பந்து விளையாட்டளரான
ஃபைசால் ஹலிம் மீது நேற்று எரி திராவகம் வீசப்பட்டச் சம்பவம்
தொடர்பில் விரிவான விசாரணையை நடத்தும்படி காவல் துறையை
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

அதே சமயம், தேசிய கால்பந்து அணியின் விளையாட்டாளரான அக்யார்
ரஷிட் வீட்டில் நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவம் தொடர்பிலும் உரிய
நடவடிக்கைகளை எடுக்கும்படி சம்பந்தப்பட்டத் தரப்பினரை அவர்
வலியுறுத்தினார்.

ஃபைசால் ஹலிம் (சிலாங்கூர் எஃப்.சி. விளையாட்டாளர்) மற்றும் அக்யார்
ரஷிட் (தேசிய விளையாட்டாளர்) மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற
தாக்குதலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தனது பேஸ்புக்
பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரவுடித்தனமான இந்த செயல் வரம்பு மீறியதாக உள்ளதோடு அவ்வாறு
ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது. அவ்விரு விளையாட்டளர்களும்
விரைவில் குணடைய பிரார்த்திக்கிறேன். அதே சமயம் இச்சம்பவங்கள்
தொடர்பில் விரிவான விசாரணையை நடத்தும்படியும் போலீசாரை
கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

நேற்று மாலை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பேரங்காடி ஒன்றில் ஃபைசால்
மீது எரிதிராவகத் தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்திய
விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான்
ஹலிமி, கழுத்து, தோள்பட்டை, கை, நெஞ்சு ஆகிய பகுதிகளில் அவருக்கு
இரண்டாம் கட்ட தீப்புண்கள் ஏற்பட்டுள்ளதாகச் சொன்னார்.

இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்த சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின்
இடரிஸ் ஷா, இச்சம்பவம் தொடர்பில் விரைந்து விசாரணை
மேற்கொள்ளும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, கோல திரங்கானுவில் உள்ள ஐகோன் ரெசிடன்ஸ்
குடியிருப்பில் உள்ள வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தின் போது
திரங்கானு குழுவின் விளையாட்டாளரான அக்யார் தலை மற்றும்
கால்களில் காயங்களுக்குள்ளானார்.


Pengarang :