NATIONAL

போலி பங்கு முதலீட்டுத் திட்டத்தை நம்பி குமாஸ்தா 109,540 வெள்ளியை இழந்தார்

குவாந்தான், மே 6- இணையத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட இல்லாத
முதலீட்டுத் திட்டத்தை நம்பி பெண் குமாஸ்தா ஒருவர் தனது சேமிப்புத்
தொகையான 109,540 வெள்ளியை இழந்தார்.

கடந்த மார்ச் மாதம் இண்ஸ்டாகிராமில் வெளியான அதிக லாபத்தை
ஈட்டித் தரும் முதலீடு தொடர்பான விளம்பத்தால் 37 வயதுடைய அந்த
தனித்து வாழும் தாய் ஈர்க்கப்பட்டதாகப் பகாங் மாநில போலீஸ் தலைவர்
டத்தோஸ்ரீ யாஹ்யா ஓத்மான் கூறினார்.

அந்த திட்டத்தில் முதலீடு செய்யும் நோக்கில் தனது சொந்த
சேமிப்பிலிருந்த பணத்தோடு நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன்
வாங்கி 41 பரிவர்த்தனைகள் மூலம் வெவ்வேறு வங்கி கணக்குகளில்
பணத்தை சேர்த்ததாக அவர் சொன்னார்.

அந்த முதலீட்டுத் திட்டத்தின் வழி லாபத்தைப் பெற வேண்டுமானால்
மேலும் கூடுதலாக பல்வேறு கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்று
சந்தேகப் பேர்வழி கூறியதைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை அந்த
மாது உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த மோசடி தொடர்பில் அந்த மாது குவாந்தான்
மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்தார். இச்சம்பவம்
தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரணை
நடத்தப்பட்டு வருகிறது என்று யாஹ்யா கூறினார்.

இணையத்தின் வழி மேற்கொள்ளப்படும் இல்லாத முதலீட்டுத்
திட்டங்களை நம்பி ஏமாந்து விட வேண்டாம் என பொது மக்களை அவர்
கேட்டுக் கொண்டார்.


Pengarang :