NATIONAL

தேர்தல் பிரசாரத்தில் மாமன்னரின் படத்தை பயன்படுத்த ஹராப்பான் ஒருபோதும் அனுமதித்ததில்லை

ஷா ஆலம், மே 6- தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு மாட்சிமை தங்கிய
பேரரசரின் படத்தைப் பயன்படுத்த பக்கத்தான் ஹராப்பான் ஒருபோதும்
அனுமதித்ததில்லை என்று கோல குபு பாரு இடைத் தேர்தலுக்கான
ஹராப்பான் கூட்டணியின் பிரசார நிர்வாகி கூறினார்.

இவ்வார இறுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இரு ஆடவர்கள் பேரரசர்
சுல்தான் இப்ராஹிமின் படத்தை தங்கள் வாகனங்களில் ஏந்திச் சென்றது
தொடர்பில் இங் ஸீ ஹான் இவ்வாறு கருத்துரைத்தார்.

இத்தகையச் சம்பவம் ஒருபோதும் நிகழ்ந்திருக்கக் கூடாது எனக் கூறிய
அவர், இதன் தொடர்பில் உள்ளுர் அதிகாரிகளுடன் தாங்கள் ஒத்துழைக்கத்
தயாராக உள்ளதாகச் சொன்னார்.

இத்தகையச் செயல்களைப் செய்யும்படி எங்கள் தன்னார்வலர்களுக்கு
உத்தரவிடவோ அனுமதிக்கவோ கிடையாது என்பதை கோல குபு பாரு
இடைத் தேர்தலுக்கான ஹராப்பான் பிரச்சார நிர்வாகி என்ற முறையில்
நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மாமன்னரின் படத்தைப் பயன்படுத்துவது
நியாயமற்றது என்பதோடு அவ்வாறு நிகழ்ந்திருக்கவும் கூடாது என அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பிரசாரத்தின் போது சுல்தான் இப்ராஹிமின் படத்தை ஏந்திச் சென்றது
தொடர்பில் போலீசார் இரு ஆடவர்களைக் கைது செய்ததோடு நான்கு
சக்கர இயக்க வாகனத்தையும் பறிமுதல் செய்தது தொடர்பில் இங்
இவ்வாறு கருத்துரைத்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதை உலு சிலாங்கூர்
மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது பைசால் தாஹ்ரிம்
உறுதிப்படுத்தினார். அந்த வாகனம் ஹராப்பான் கொடிகளைக்
கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் 66 வயதுடைய அவ்விரு ஆடவர்களும் கோல குபு
பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர் என்று தேசிய
போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் இன்று
தெரிவித்தார்.

குரோத நோக்கத்துடன் செயல்பட்டதற்காக 1954ஆம் ஆண்டு தேர்தல்
குற்றச் சட்டத்தின் 4ஏ(1)வது பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக
குற்றஞ்சாட்டப்படும் என்றார் அவர்.


Pengarang :