NATIONAL

கால்பந்து வீரர் ஃபைசாலுக்கு நான்காம் டிகிரி தீக்காயம்- பேச்சு மற்றும் உடல் செயல்பாடுகளில் பாதிப்பு

கோலாலம்பூர், மே 7- எரிதிராவகத் தாக்குதலுக்கு இலக்கான தேசிய
கால்பந்து குழுவின் முன்னணி விளையாட்டாளர்களில் ஒருவரான
முகமது ஃபைசால் அப்துல் ஹலிம் நான்காம் டிகிரி தீக்காயங்களுக்கு
உள்ளாகியுள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நேற்று
முதலாவது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த எரிதிராவகத் தாக்குதல் காரணமாக ஃபைசாலின் உடல்
செயல்பாடுகளும் பேச்சும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் கால்பந்துக்
குழுவின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஷாரில் மொக்தார் கூறினார்.

ரெட் ஜெயண்ட் எனப்படும் சிலாங்கூர் கால்பந்து அணியின் முக்கிய
ஆட்டக் காரரான அவருக்கு மேலும் இரு அறுவை சிகிச்சைகள்
மேற்கொள்ள வேண்டியுள்ளது என அவர் சொன்னார்.

ஃபைசாலுக்கு ஏற்பட்டது இரண்டாம் டிகிரி பாதிப்பு அல்ல. மாறாக
நான்காம் பாதிப்பு பாதிப்பு என்பதை முதலாவது அறுவை சிகிச்சைக்குப்
பின்னர் மருத்துவர்கள் கண்டறிந்தனர். தற்போதைய மதிப்பீட்டின் படி
அவருக்கு மேலும் இரு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட
வேண்டியுள்ளது என ஷாரில் தெரிவித்தார்.

ஃபைசால் தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவரை மருத்துவ நிபுணர்கள்
அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றனர் என்றார் அவர்.

முகத்தில் குறிப்பாக கன்னம், மூக்கு, மற்றும் வாயில் ஏற்பட்ட எரிதிராவக
பாதிப்பு காரணமாக ஃபைசாலின் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
உடலிலும் கைகளிலும் ஏற்பட்ட கடுமையான தீக்காயங்கள் காரணமாக
அவரின் உடல் செயல்பாடுகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன என்று
அவர் பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

கால்பந்து ரசிகர்களால் ‘மிக்கி‘ என அன்புடன் அழைக்கப்படும் ஃபைசால்
இன்னும் பத்து நாட்களுக்கு மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில்
இருந்த வர வேண்டும் எனவும் அவர் சொன்னார்.

நேற்று முன்தினம் பிற்பல் கோத்தா டாமன்சாராவிலுள்ள பேரங்காடி
ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்களால் ஃபைசால் எரி திராவக
தாக்குதலுக்கு உள்ளானார்.


Pengarang :